HBD P. T. Usha: 20 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை!
P. T. Usha: 'பையோலி எக்ஸ்பிரஸ்', உடன்பரி' மற்றும் 'கோல்டன் கேர்ள்' என்று அழைக்கப்பட்டவர். இந்தியாவில் தடகள விளையாட்டின் முகமாக மாறியவர்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்று முதல் 10 இடங்களுக்குள் வந்தவர். சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 4வது மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ, விளையாட்டுத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப்ஸ், ஒலிம்பிக், உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் உள்பட பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்காக நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை வென்றவர்.
1984 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சில மணித் துளி இடைவெளியில் பதக்க வாய்ப்பை இழந்தவர்.
இவர் தான் பி.டி.உஷா. யாராவது வேகமாக ஓடினால் 'நீ என்ன பெரிய பி.டி.உஷாவா' என கேட்பதை நாம் கடந்து வந்திருப்போம்.
இரண்டு தசாப்தங்களாக இந்திய டிராக் அண்ட் ஃபீல்டின் ராணியாக, ரேஸ் டிராக்கில் தனது வேகத்தால் 'பையோலி எக்ஸ்பிரஸ்', உடன்பரி' மற்றும் 'கோல்டன் கேர்ள்' என்று அழைக்கப்பட்டவர். இந்தியாவில் தடகள விளையாட்டின் முகமாக மாறியவர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் குதலி என்ற ஊரில் 1964ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி பிறந்தார் உஷா.
1976 ஆம் ஆண்டில் கேரள மாநில அரசு கண்ணூரில் மகளிருக்காக விளையாட்டுப் பிரிவைத் தொடங்கியது, உஷா, கண்ணூர் விளையாட்டுப் பிரிவில் உள்ள நாற்பது பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியாரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
1979 ஆம் ஆண்டில் தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு அவர் தனிநபர் சாம்பியன்ஷிப்பை வென்று வெளிச்சத்திற்கு வந்தார்.
1980 ஆம் ஆண்டில் கராச்சியில் நடந்த பாகிஸ்தான் ஓபன் தேசிய போட்டியில் அவர் நாட்டிற்காக 4 தங்கப் பதக்கங்களை வென்றார். 1982 ஆம் ஆண்டில் சியோலில் நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், அவர் மிகவும் மேம்பட்டிருந்தார். 400 மீட்டர் தடை தாண்டும் ஹீட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற அவர், 400 மீட்டர் தடை தாண்டும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கத்தை 1/100 விநாடிகளில் தவறவிட்டார்.
தோற்றாலும் தனது 20-வது வயதில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் உஷா.
ஒலிம்பிக்கில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தகர்க்க முடியாத இந்திய சாதனையை இன்றும் வைத்துள்ளார்.
பி.டி.உஷா இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் மில்லினியத்தின் விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், டிராக் அண்ட் ஃபீல்டில் அதிக பதக்கங்களை வென்றவரும் இவரே. 2000 ஆவது ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். இளம் திறமையாளர்களை உருவாக்குவதற்காக கேரளாவில் விளையாட்டுப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
உஷா 1991 ஆம் ஆண்டில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ஆய்வாளராக இருந்த வி.சீனிவாசனை மணந்தார். இந்த தம்பதிக்கு விக்னேஷ் உஜ்வால் என்ற மகன் உள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்