Pak vs SA, T20 world cup: அரையிறுதி கடைசி வாய்ப்பை கட்டியாக பிடித்த பாகிஸ்தான்
அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள நல்ல நெட் ரேட்டில் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் பலம் வாய்ந்த தென்ஆப்பரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியால் இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் மிகவும் வெற்றிகாரமான ஓபனிங் ஜோடியாக திகழ்ந்தது முகமது ரிஸ்வான் - பாபர் அசாம். ஆனால் உலகக் கோப்பை தொடரில் அது தலைகீழாக மாறிப்போனது.
இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிதாக சோபிக்காத இருவரும் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முகமது ஹாரிஸ் 28 ரன்கள் என அதிரடி காட்டினார்.
இருப்பினும் 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் மிடில் ஆர்டர் பேட்டர்கள் அணியை கரைசேர்த்தனர்.
இஃப்திகர் அகமத் 51, முகமது நவாஸ் 28 ரன்கள் எடுக்க, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷதாப் கான் 52 ரன்கள் எடுத்து சிறப்பாக பினிஷ் செய்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 185 ரன்கள் குவித்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பினிஷ் செய்ததது போல் பெளலிங்கிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தை தந்தனர்.
டி காக் 0, ரோஸவ் 7, ஐடன் மார்க்ரம் 20, ஹென்ரிச் க்ளாசன் 15, ஸ்டப்ஸ் 18 என முக்கிய பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர்.
ஆட்டத்தின் இடையே மழை பெய்து போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியபோது, 14 ஓவரில் 142 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது.
ஆனால் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டான நிலையில் தென்ஆப்பரிக்கா அணி ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் தவித்தது. அணியின் கேப்டன் புவாமா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
14 ஓவர் முடிவில் தென்ஆப்பரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் பெளலர்களில் ஷாகீன் அப்ரிடி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி கடைசி வாய்ப்பை வெற்றியுடன் முடித்தது.
மழை குறுக்கீடு இல்லாவிட்டாலும் பந்து வீச்சில் நன்கு ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி நிச்சயமாக தென் ஆப்பரிக்காவை வீழ்த்தியிருக்கும்.
பாகிஸ்தான் பெற்ற இந்த வெற்றியால் இந்தியாவுக்கு தற்போது புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ஜெயித்தால், 6 புள்ளிகளை பெற்ற ரன்ரேட்டிவ் இந்தியாவை விட முன்னணியில் இருப்பதால் இரண்டவது இடத்துக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.
தென்ஆப்ரிக்கா அணி நெதர்லாந்துடன் தனது அடுத்த போட்டியில் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு சென்றுவிடும். இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணியுடன் நாளை இந்தியா விளையாடும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இங்கு நடைபெற வேண்டிய மூன்று போட்டிகள் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
எனவே மழை பெய்யும் வாய்ப்பு, கட்டாய வெற்றி நெருக்கடியுடன் இந்தியா தனது கடைசி போட்டியில் களமிறங்கவுள்ளது.
டாபிக்ஸ்