அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு இந்த மாநிலத்தில் விளையாட வாய்ப்பு-மீண்டும் இந்தியா வருகிறார் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு சர்வதேச நட்பு போட்டிக்காக கேரளாவுக்கு வர உள்ளது என்று மாநில விளையாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லியோனல் மெஸ்ஸி இந்தியா வர வாய்ப்புள்ளது. மீண்டும். இந்த முறை கொல்கத்தாவுக்கு அல்ல, கேரளாவுக்கு. அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளாவுக்கு வருகை தந்து சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில் மாட்ரிட்டில் அப்துரஹிமான் தலைமையிலான மாநில விளையாட்டு அமைச்சகம் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) இடையே நடந்த விவாதங்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் இதேபோன்ற அறிவிப்பை பேஸ்புக் பதிவு மூலம் வெளியிட்டார்.
"லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட உலகின் நம்பர் 1 கால்பந்து அணியான அர்ஜென்டினா அடுத்த ஆண்டு கேரளாவுக்கு வருகை தருகிறது. மாநில அரசின் முழுமையான மேற்பார்வையில் போட்டி நடைபெறும். போட்டியை நடத்த மாநில வர்த்தகர்கள் நிதி உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்" என்று அப்துரஹிமான் செய்தியாளர்களிடம் கூறினார்.