PBKS vs MI: வானவேடிக்கை நிகழ்த்திய லிவிங்ஸ்டன்! மீண்டும் மும்பை அணிக்கு சவாலான இலக்கு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pbks Vs Mi: வானவேடிக்கை நிகழ்த்திய லிவிங்ஸ்டன்! மீண்டும் மும்பை அணிக்கு சவாலான இலக்கு

PBKS vs MI: வானவேடிக்கை நிகழ்த்திய லிவிங்ஸ்டன்! மீண்டும் மும்பை அணிக்கு சவாலான இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2023 10:01 PM IST

லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் கூட்டாக சேர்ந்து மும்பை பெளலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இரு அணிகள் மோதிக்கொண்ட முந்தைய போட்டியிலும் இதே ஸ்கோர்தான் பஞ்சாப் கிங்ஸ் அடித்தது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் (AFP)

பஞ்சாப்பின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஷிகர் தவான், மாத்யூ ஷார்ட் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

தவான் 30, ஷார்ட் 27 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதன் பின்னர் பேட் செய்ய வந்த லியாம் லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் மும்பை பெளலர்களை வெளுத்து வாங்கினர். பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து வான வேடிக்கை நிகழ்த்திய இருவரும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பார்முக்கு திரும்பிய லியாம் லிவிங்ஸ்டன், இந்த போட்டியிலும் தொடர்ந்தார். அரைசதம் விளாசிய லிவிங்ஸ்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். அதேபோல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜித்தேஷ் ஷர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. இந்த இரு அணிகள் மோதிக்கொண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியிலும் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தது.

அந்தப் போட்டியில் 201 ரன்கள் எடுத்த மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை அணியின் ஸ்டார் பெளலராக கருதப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 56 ரன்களை வாரி வழங்கி விக்கெட்டுகளை எதுவும் வீழ்த்தவில்லை. இவருக்கு அடுத்தபடியாக அர்ஷத்கான் 48 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா மட்டும் எகனாமிக்கலாக பந்து வீசியிருந்தார். 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.