RR vs LSG: பெனால்டியில் சிக்கிய லக்னோ; Luckஐ பயன்படுத்த தவறிய ராஜஸ்தான்! கடைசி நேரத்தில் நடந்த டுவிஸ்ட்
குறித்த நேரத்தில் பந்து வீசாமல் பெனால்டியில் சிக்கி கடைசி ஓவரில் நான்கு பீல்டர்களை மட்டும் பவுண்டரி அருகே நிறுத்தும் சூழல் லக்னோவுக்கு உருவாகியது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு ஆண்டுகளுக்கு உள்ளூர் மைதானத்தில் களமிறங்கிய முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக அமைந்த இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் பார் ஸ்கோரை விட குறைவு என்ற கணிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 155 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் ஆகியோர் வழக்கம்போல் நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 87 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தனது வழக்கமான பாணியில் வானவேடிக்கை நிகழ்த்தாமலும், அதே சமயம் ரன்குவிப்பிலும் ஈடுபட்ட பட்லர் 40 ரன்னில் அவுட்டானார். அத்துடன் இதுவரை இல்லாத அளிவில் 100 ஸ்டிரைக் ரேட்டுக்கும் குறைவாக பட்லர் எடுத்தார்.
இவர்களை தொடர்ந்து சஞ்சு சாம்சன் 2 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டிகளில் பினிஷிங்கில் கலக்க வந்த ஹெட்மேயரும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல், ரியான் பராக் ஆகியோர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரன் சேஸில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட நேரத்தில் ஓவரை வீசி முடிக்காத காரணத்தால் லக்னோ அணிக்கு பெனால்டி வழங்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் பவுண்டரி அருகே நான்கு பீல்டர்கள் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்ற சூழல் உருவானது.
கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்று இருந்தபோது முதல் பந்தை எதிர்கொண்ட ரியான் ப்ராக் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை படிக்கலுக்கு தந்தார். அப்போது நன்றாக பேட் செய்து வந்த படிக்கல்,கடைசி ஓவரின் 3வது பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து கடைசி மூன்று பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பேட் செய்ய வந்த இளம் வீரர் துருவ் ஜுரல் சிக்ஸர் அடிக்க முயற்சித்த பவுண்டரி அருகே தீபக் ஹூடா பிடித்த அற்புத கேட்ச்சில் சிக்கிக்கொண்டார்.
இதன்மூலம் லக்னோ வெற்றி உறுதியான நிலையில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.
லக்னோ பெளலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசி 30 ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்தனர். ஆவேஷ் கான் 3, மார்கஸ் ஸ்டோய்னில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங்கில் 21 ரன்கள், பெளலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் தோல்வியுற்றபோதிலும் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
டாபிக்ஸ்