CSK vs PBKS: பஞ்சாப்பை கவிழ்க்க தோனி வைத்திருக்கும் பக்காவான பிளான்! சேப்பாக்கம் சோகங்களை தவிர்க்க என்ன வழி?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Vs Pbks: பஞ்சாப்பை கவிழ்க்க தோனி வைத்திருக்கும் பக்காவான பிளான்! சேப்பாக்கம் சோகங்களை தவிர்க்க என்ன வழி?

CSK vs PBKS: பஞ்சாப்பை கவிழ்க்க தோனி வைத்திருக்கும் பக்காவான பிளான்! சேப்பாக்கம் சோகங்களை தவிர்க்க என்ன வழி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 30, 2023 06:10 AM IST

சேப்பாக்கத்தில் இன்று மோத இருக்கும் சிஎஸ்கே - பஞ்சாப் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை இழக்காமல் தற்காத்து கொள்ளும். தொடர்ந்து உள்ளூர் மைதானங்களில் வெளியூர் அணிகள் வந்து வெற்றிகளை குவிக்கும் டிரெண்டிங்கை தல தோனி மாற்றியமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல்
சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல்

இதையடுத்து கடந்த போட்டிகளில் மிகப் பெரிய அளவில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் தோல்வியை சந்தித்த நிலையில், அதிலிருந்து மீளும் விதமாகவும், புள்ளிப்பட்டியலில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

சிஎஸ்கே அணியின் காம்பினேஷன் சரியாக இருந்து வருவதால், கடந்த மூன்று போட்டிகளாக அணியில் மாற்றம் செய்யாமல் விளையாடி வருகிறார் கேப்டன் தோனி. பென் ஸ்டோக்ஸ், டுவெய்ன் பிரீடோரியஸ் போன்றொரு பெஞ்சில் அமரவைக்கப்பட்டாலும், தற்போது அணியின் லெவனில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், பெளலர்கள் அணிக்கு தேவைப்படும் பங்களிப்பை சரியாக அளித்து வருகிறார்கள்.

அத்துடன் சேப்பாக்கத்தில் எப்படி விளையாடினால் வெற்றி பெற முடியும் என்ற வித்தையை நன்கு அறிந்த தோனி, பஞ்சாப் அணிக்கு எதிராகவும் சரியான ப்ளானை வைத்திருப்பார் என்றே நம்பலாம்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை நிலையான காம்பினேஷன் இல்லாமல் விளையாடி வருகிறது. காயத்துக்கு பின்னர் கேப்டன் ஷிகர் தவான் அணிக்கும் திரும்பியது அணிக்கு பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஆரம்பத்தில் சில போட்டிகளில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டு, தொடரின் பிற்பாதியில் ஸ்டிரைக் பெளலரான ரபாடாவை களமிறக்கி இருப்பது நல்ல திட்டமாக இருந்தாலும் அதற்கான பலனை இன்னும் பெறாமல் உள்ளது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை போட்டு சாத்தும் அளவில், ஸ்பின்னர்களிடம் ரன்குவிப்பில் ஈடுபடுவதில் தடுமாற்றம் அடைவது இந்த சீசனில் தொடர்கதையாகவே உள்ளது. எனவே தோனியின் திட்டத்தில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் மீதான ஸ்பின் பெளலிங் அட்டாக் என்பது பிரதானமாக இருக்கும்.

அதற்கு ஏற்றார்போல் சேப்பாக்கம் மைதானமும் பேட்டிங் செய்ய சாதகமாக அமைந்தாலும், ஸ்லோ பெளலர்களுக்கு நன்கு உதவும். இங்கு இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளும் இரவு ஆட்டங்களாக இருந்த நிலையில், இன்றைய போட்டி மாலை நேர போட்டியாக 3.30 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த காலங்களில் சேப்பாக்கத்தில் மாலை பொழுதில் நடைபெற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்களே சாதித்துள்ளனர். சிஎஸ்கே அணியின் அதிகபட்ச ஸ்கோராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட 246 ரன்கள் மாலை நேர போட்டியாகத்தான் அமைந்தது.

மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னையிலும் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போட்டி மழையால் தாமதம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

பிட்ச் எப்படி?

இந்த சீசனில் இதுவரை பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதமாக சென்னை ஆடுகளங்கள் அமைந்துள்ளன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாகவும், ஸ்பின்னர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு தரும் விதமாக ஆடுகளம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 15, பஞ்சாப் 12 முறை வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் 8 முறை விளையாடியுள்ள பஞ்சாப் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் ஒரு முறை சூப்பர் ஓவரில் வென்றுள்ளது. எனவே சேப்பாக்கம் சோகம் பஞ்சாப்புக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.