HBD Albie Morkel: சிஎஸ்கே அணியின் முதல் அதிரடி மன்னன் - Perfect ஆல்ரவுண்டராகவும், மேட்ச் வின்னராகவும் ஜொலித்தவர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் அதிரடி மன்னனாக இருந்தவர் ஆல்பி மோர்கல். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் பல்வேறு போட்டிகளில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். சிஎஸ்கே வென்ற முதல் ஐபிஎல் கோப்பை வெற்றிக்கு மேஜிக் தருணம் இவரது ஓவரில்தான் நிகழ்ந்துள்ளது.
தென்ஆப்பரிக்கா அணியில் 1990களின் காலகட்டத்தில் சிறந்த ஆல்ரவுண்டராக பட்டையை கிளப்பியவர் லான்ஸ் க்ளூஸ்னர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டக்கூடிய ஆல்ரவுண்டரான இவர் எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் அளிக்ககூடிய வீரராகவே இருந்தார்.
க்ளூஸ்னர் 2004இல் ஓய்வு பெற, அதே ஆண்டில் அவரது இடத்தை நிரப்பி சரியான வீரராக உருவெடுத்தார் ஆல்பி மோர்கல். க்ளூஸ்னர் போல் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் வல்லமை கொண்ட வீரராக திகழ்ந்தார்.
சிக்ஸர்களை பறக்க விட்டு வானவேடிக்கை நிகழ்த்தும் பேட்ஸ்மேனாக இருந்து வந்த ஆல்பி மோர்கலை, ஐபிஎல் முதல் சீசனிலேயே சிஎஸ்கே அணி பெரும் தொகை கொடுத்து வாங்கியது. அப்போது பெரிய அளவில் பிரபலம் இல்லாத மோர்கல்லுக்கு இவ்வளவு விலையா என்று பலரும் புருவத்தை உயர்த்தியபோது, அதிரடியான பேட்டிங்கின் மூலம் தனது மதிப்பை நியாயப்படுத்தினார்.
பல்வேறு போட்டிகளில் அதிரடியாக பினிஷ் செய்து மேட்ச் வின்னராக இருந்துள்ளார் மோர்கல். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் அவர் இதை செய்தார். ஐபிஎல் முதல் சீசனில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரக்யன் ஓஜா வீசிய பந்தை 125 மீட்டர் தூர சிக்ஸராக பறக்கவிட்டார் ஆல்பி மோர்கல். இப்போது வரை ஐபிஎல் தொடரில் நீண்ட தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸராக இது உள்ளது. இன்னும் இவரது சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
2010வது சீசனில் சிஎஸ்கே அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த சீசன் இறுதிப்போட்டியில் அதிரடியில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்டை, சிஎஸ்கே கேப்டன் தோனி பொறி வைத்து தூக்கிய சம்பவம் அனைவருக்கும் தெரியும். அந்த மேஜிக் நிகழ்ந்தது ஆல்பி மோர்கல் ஓவரில்தான்.
இதைப்போல் 2013 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்த மோர்கல், கைமீறி சென்ற போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.
சிஎஸ்கே அணிக்காக 2008 முதல் 2013 வரை ஆறு சீசன்கள் விளையாடினார் மோர்கல். தொடர்ந்து இவரை Retain செய்து வந்தார் தோனி. பின்னர் 2014 சீசனில் மெகா ஏலத்தின்போது அணியிலிருந்து மோர்கல் விடுவிக்கப்பட்டார்.சிஎஸ்கேவுக்காக 78 போட்டிகளில் விளையாடியிருக்கும் மோர்கல் 76 விக்கெட்டுகளும், 827 ரன்கள் அடித்து Perfect ஆல்ரவுண்டராக இருந்துள்ளார்.
2014 சீசனில் ஆர்சிபி, 2015இல் டெல்லி டேர்டெவில்ஸ், 2016 ரைசிங் புணே ஜெயிண்ட்ஸ் அணிகளில் அடுத்தடுத்த சீசன்களில் விளையாடினார் மோர்கல்.
தென்ஆப்பரிக்கா தேசிய அணியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்த மோர்கல், சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரராக ஜொலித்தார். டி20 மற்றும் ஒரு நாள் என மொத்தம் 108 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் மோர்கல் 76 விக்கெட்டுகளையும் எடுத்து, 1354 ரன்களையும் குவித்துள்ளார்.
2019இல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்த மோர்கல் தற்போது நமிபியா அணியின் அசிஸ்டெண்ட் பயிற்சியாளராக இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியின் முதல் அதிரடி மன்னனாக இருந்த மோர்கல் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்