Ambati Rayudu: சிரித்துக்கொண்டே செயலில் ஈடுபடுங்கள்! கவாஸ்கர் விமர்சனத்துக்கு டுவிட் மூலம் ராயடு பதிலடி
இந்த சீசனில் சிஎஸ்கே அ்ணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராகவே இடம்பிடித்த அம்பத்தி ராயுடு, எந்த வித தாக்கத்தையும் இதுவரை ஏற்படுத்தாமல் இருப்பதே நிஜம். இருப்பினும் முக்கிய வீரரான அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது அணி நிர்வாகம்.
ஐபிஎல் 2023 சீசனின் பாதி போட்டிகள் முடடிவுற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தில் உள்ளது. பவர்புல் பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, பந்து வீச்சில் பெரிய ஸ்டார் பெளலர்கள் இல்லாவிட்டாலும் இளம் பெளலர்களை வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இம்பேக்ட் வீரர் விதிமுறை காரணமாக அணியின் முக்கிய பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு பேட்டிங் செய்ய மட்டுமே அணி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் முதலில் பேட் செய்தால் அவரை பேட்ஸ்மேனாகவும், சேஸிங் செய்யும்போது ஏதாவதொரு பெளலரை நீக்கிவிட்டு இம்பேக்ட் வீரராகவும் அவருக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.
இருப்பினும் ராயுடு இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விளையாடிய 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ் பேட் செய்து 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்திருப்பதோடு, அவரது சராசரி 16.60 என உள்ளது.
சிஎஸ்கே அணி விளையாடிய கடைசி போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் பேட் செய்ய வந்து டக் அவுட்டாகி ஏமாற்றினார் ராயுடு.
இதையடுத்து மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் அவரை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் வர்ணனையின்போது விமர்சித்தார்.
"யாராக இருந்தாலும் பீல்டிங்கில் ஈடுபட வேண்டும். வெறுமனே நேரடியாக வந்து பேட் செய்து, பந்தை பறக்க விட்டு ரன் குவிப்பில் ஈடுபட முடியாது.
ஏற்கனவே டெல்லி வீரர் ப்ருத்வி ஷா அவ்வாறு பேட்டிங் மட்டும் செய்ய அனுப்பி, அவர் பெரிதாக ஜொலிக்காமல் உள்ளார். பீல்டிங் செய்யாவிட்டால், ஸ்கோரும் எடுக்க முடியாது" என்று கூறினார்.
இந்த விமர்சனத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள ராயடு, "வாழ்க்கையிலும்,விளையாட்டிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நாம் எப்போதும் நேர்மறையாக இருக்க வேண்டும். கடினமான உழைப்பை வெளிப்படுத்தினால், அனைத்தும் மாறும். முடிவுகள் எப்போதும் நம் முயற்சியின் அளவுகோலாக இருக்காது.
எனவே எப்பொழுதும் சிரித்துக் கொண்டே செயலில் ஈடுபடுங்கள்" என்று தனக்கு தானே பூஸ்ட் ஏற்றிக்கொள்ளும் விதமாக பதிவிட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி நிர்வாகத்தை பொறுத்தவரை சிறந்த வீரர் சிறப்பாக செயல்படாவிட்டாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து அவர்களை நம்பிக்கை பெற வைக்கும். கடந்த காலங்களில் பல்வேறு வீரர்கள் இவ்வாறு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அதேபோன்று தொடர்ந்து சொதப்பி வரும் ராயுடுவும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.
டாபிக்ஸ்