தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: பஞ்சாப் கிங்ஸை புரட்டி எடுத்த டெல்லி! 6வது இடத்துக்கு முன்னேற்றம்

IPL 2022: பஞ்சாப் கிங்ஸை புரட்டி எடுத்த டெல்லி! 6வது இடத்துக்கு முன்னேற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 20, 2022 11:28 PM IST

துல்லியமான பெளலிங் மூலம் பஞ்சாப் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி சீசனின் மிக குறைவான ஸ்கோரை பதிவு செய்ய வைத்தனர் டெல்லி பெளலர்கள். இதற்கு அடுத்து பேட்டிங்கிலும் குறைவான ஓவரில் அந்த ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் அணி மீது ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தினர்.

பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கில் கலக்கிய டேவிட் வார்னர்
பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கில் கலக்கிய டேவிட் வார்னர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் அதிரடி காட்டிய கேப்டன் மயங்க் அகர்வால் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் ஷர்மா ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றி வரும் ஷாருக்கான் இன்றும் 20 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதேபோல் நன்றாக விளையாடி வந்த பனுக்க ராஜபக்‌ஷேவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட பேர்ஸ்டோவும் ரன்குவிப்பில் ஈடுபடாமல் ஏமாற்றி வருகிறார்.

டெல்லி பெளலர்களின் துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறினார்கள். 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நடப்பு சீசனில் மிக குறைந்த ஸ்கோராக 115 என பதிவு செய்தனர் பஞ்சாப் அணியினர்.

டெல்லி பெளலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினர். கலீல் அஹமத், லலித் யாதவ், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து எளிதான இலக்கை விரட்ட களமிறங்கிய டெல்லி பேட்ஸ்மேன்கள், பெளலர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்பதுபோல் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கினர்.

பஞ்சாப் பெளலர்களின் பந்து வீச்சை நாலப்புறம் சிதறடித்தனர். டெல்லி தொடக்க பேட்ஸ்மேன்கள் ப்ருத்வி ஷா - வார்னர் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரிகளாக விரட்டினர்.

பவர்ப்ளே ஓவரில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் குவித்தனர். இந்த ஸ்கோர் டெல்லி அணியின் அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டில் ஆர்சிபி அணிக்கு எதிராக 71 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரை ஸ்பின்னர் ராகுல் சஹார் வீசியபோது, ஸ்லாக் ஸ்வீப் ஆட முயற்சித்த ப்ருத்வி ஷா, மிட் விக்கெட் திசையில் எல்லிஸிடம் பிடிபட்டார். 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த அவர் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார்.

மறுபக்கம் சிறப்பாக பேட் செய்து வந்த வார்னர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 10.3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி.

வார்னர் கடைசி வரை அவுட்டாகமல் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். அணியினர் 6 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கடினமான சூழ்நிலையில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் முழுவதுமாக சொதப்பலை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்துக்கு பின்தங்கியது. துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் பேட்ஸ்மேன்களை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்குப் பிறகு டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது,"அணியில் கடந்த சில நாள்களாக பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டன. போட்டி ரத்து ஆகலாம் என்ற பேச்சுகளும் எழுந்தன. ஆனால் அணி வீரர்களிடம் நமது கவனத்தை சிதற விடக்கூடாது என்று உரையாடல் நிகழ்த்தினோம். வார்னர், ஷா ஆகியோரிடம் எதுவும் தெரிவிப்பதில்லை. அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். போட்டி முடிவில் நம் கைகளில் சில சமயம் இல்லாமல் போனாலும் அணிக்கு தேவையானவற்றை வெளிப்படுத்த வேண்டும். சுமார் இரண்டு ஓவர்களுக்கு பிறகு பந்து மெதவாக வருவதை நன்கு கவனித்த பின்பு, ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்த முடிவு செய்தேன். 150 ரன்களுக்குள் அவர்கள் கட்டுப்படுத்தினால் போதும் என நினைத்தேன்" என்றார்.

தோல்விக்கு பிறகு மயங்க் அகர்வால் கூறும்போது, "கடினமாக போட்டியாக எங்களுக்கு அமைந்தது. பேட்டிங், பெளிலிங் என இரண்டிலும் சரியாக செயல்படவில்லை. தொடக்கத்திலியே அதிகமாக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் மிகவும் குறைவாகவே ஸ்கோர் செய்தோம்." என்றார்.

WhatsApp channel

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்