IPL 2022: ஸ்லோ ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்டிங் படை திணறல்! 20 ஓவரில் 154 ரன்கள்
சன் ரைசர்ஸ் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்து பேட்டுக்கு அவ்வளவு எளிதாக வராத நிலையில் பவுண்டரிகளை விரட்ட சிரம்பட்டனர் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள். ஒரு வழியாக கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை குவித்து 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
ஐபிஎல் 15வது சீசனின் 17வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசரஸ் அணிகளுக்கு இடையே மும்பை டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதுவரை 16 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 முறையும், சன் ரைசர்ஸ் 4 முறையும் வென்றுள்ளன.
இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசரஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பெளலிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இடம்பிடித்திருந்த தென் ஆப்பரிக்கா பெளலர் பிரிடோரியஸுக்கு பதிலாக இலங்கை வீரர் மஹேஷ் தீக்ஷனா சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த சமத்துக்கு பதிலாக ஷஷாங்க் சிங், ஷெப்பர்டுக்கு பதிலாக மார்கோ ஜென்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து மூன்று போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வந்த ருதுராஜ் கெய்க்வாட் இன்று சற்று நிதானமாக ஆடினார். மறுபக்கம் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உத்தப்பா 15 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆகி வெளியேறினார்.
இதற்கு அடுத்த ஓவரை சன் ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மற்றொரு தமிழக வீரர் நடராஜன் வீசிய முதல் பந்தில் 16 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், கிளீன் போல்டாகி வெளியேறினார். முதல் பந்திலேயே அற்புதமான யார்க்கர் வீசி பார்முக்கு மெல்ல திரும்ப முயற்சித்தி ருதுராஜ் விக்கெட்டை காலி செய்தார் நடராஜன்.
இதன் பின்னர் சிஎஸ்கே பேட்ஸ்மேன் ராயுடு - மொயின் அலி ஆகியோர் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் விதமாக விளையாடியதோடு, ரன் குவிப்பிலும் ஈடுபட்டனர்.
இன்றைய போட்டியின் ஆடுகளத்தில் பந்து எழும்பி பேட்டுக்கு வருவது மிகவும் மெதுவாக இருந்ததால் பவுண்டரிக்களை அடிக்க சிரமப்பட்டனர். இருப்பினும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரிகளை விரட்டினர். அத்துடன் அலி - ராயுடு ஆகியோர் இணைந்து நல்ல பார்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதிரடியாக ஆட முயன்ற சரியாக பந்து சிக்காமல் தவித்த வந்த ராயுடு, 27 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று பவுண்டரி அருகே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேபோல் சிறப்பாக பேட் செய்து வந்த மொயின் அலி 48 ரன்களில் மார்க்ரம் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். கடந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக பேட் செய்த ஷிவம் துபே இந்தப் போட்டியில் 3 பந்துகளில் நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 3 ரன்களில் வெளியேற அணியின் 122 என இருந்தது.
பின் கடைசி கட்டத்தில் ஜடேஜா சிறிய கேமியோ இன்னிங்ஸ் விளையாட 15 பந்துகளில் 23 ரன்கள் கடைசி ஓவரில் வெளியேறினார்.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே அணி 154 ரன்கள் எடுத்துள்ளது. சன்ரைசரஸ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பந்துகள் மிகவும் மெதுவாக எழும்பிய இந்த ஆடுகளத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களான உத்தப்பா, ராயுடு, மொயின் அலி, தோனி உள்ளிட்டோர் சிக்ஸ் அடிக்க முயற்சித்து தங்களது விக்கெட்டுகளை பவுண்டரி அருகே பறிகொடுத்தனர்.