Ind vs Eng, T20 Semi final: படுமோசமான பெளலிங்! இந்தியாவை வெளியேற்றிய இங்கிலாந்து
நாக்அவுட் போட்டிகள் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றியை பெறும். இதை சரியாக செய்த இங்கிலாந்து அசத்தலான வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது.1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - இங்கிலாந்து பைனலில் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியா மைதானங்களில் சேஸிங்கை போல், முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோர் செட் செய்தாலும் வெற்றி பெற்றுவிடலாம் என்பதால் டாஸில் தோல்வியுற்றது பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை.
அதேசமயம் குறைந்தது 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா அணியின் இன்றைய பெளலிங் வைத்து பார்க்கையில், 250 ரன்கள் அடித்திருந்தாலும் பத்தாது என்கிற ரீதியில்தான் இருந்தது.
வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான அதிரடி காட்டிய கேஎல் ராகுல், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் சாம்கரன் வீசிய பவுன்சர் அடிக்க ஆசைப்பட்டு ஆரம்பத்திலேயே அவுட்டாகி கிளம்பினார்.
பின்னர் ரோஹித் ஷர்மா - கோலி ஆகியோர் பார்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ரோஹித்தும் அடித்து ஆடுகிறேன் இந்திய மைதானங்களில் அடிப்பது போல் அளவில் பெரிதாக இருக்கும் ஆஸ்திரேலியா மைதனாங்களில் லாபட் ஷாட் ஆடி 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
லீக் போட்டிகளில் பேட்டிங்கில் கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் காலியாக இந்திய பேட்டிங்கில் நெருக்கடி ஏற்பட்டது. கோலி ஒரு புறம் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்க, அவருடன் பாண்ட்யாவும் இணைந்துகொண்டார்.
விக்கெட் சரிவை தடுத்து இவர்கள் ஆடினாலும், ஆரம்பத்தில் பவுண்டரி, சிக்ஸர்கள் அடிக்காமல் ஒன்று, இரண்டு என ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடைசி 4 ஓவர் எஞ்சியிருக்க ஹர்திக் பாண்ட்யா டாப் கியரை தூக்கினார்.
பொறுத்தது போதும் என கிடைக்கும் நல்ல பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். மறுபுறம் அரைசதம் விளாசிய கோலி அடுத்த பந்திலேயே அவுட்டானார்.
இருப்பினும் பாண்ட்யாவின் கடைசிகட்ட அதிரடியால் இந்தியா 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. இது நல்ல ஸ்கோர் என்றாலும் இங்கிலாந்து போன்ற வலிமையான பேட்டிங் வரிசையை கொண்ட அணியை, கட்டுப்பாடான பெளலிங் மூலம் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியா இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்த சிரமமும் இன்றி ஆரம்பத்தில் இருந்து ரன்வேட்டையில் ஈடுபட தொடங்கினார். இந்திய பெளலர்களின் பந்து வீச்சு எந்த விதத்திலும் எடுபாடாத நிலையில், பார்ம் இல்லாமல் தவித்து வந்த பட்லர் - ஹேல்ஸ் இணை மிக எளிதாக எதிர்கொண்டு பவுண்டரி, சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கினார்.
11வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த இங்கிலாந்து தனது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்ததது. இந்திய பெளலர்கள் யாரும் எவ்வித மெஜிக்கும் நிகழ்த்தாமல், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதற்காகவே பந்து வீசியது போல் ஆட்டம் அமைந்தது.
எந்த விதத்திலும் வெற்றிக்கான பாதை தென்படாத நிலையில், இந்தியா படுமோசமான பெளலிங்கை இறுதிபோட்டிக்கு நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து, இறுதிக்குள் நுழைந்தது.
முதலில் பெளிலிங்கில் மிகவும் கட்டுப்பாடுடன் வீசிய இங்கிலாந்து பெளலர்கள், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் எக்ஸ்ராஸும் வீசாமல் தவிர்த்தனர். ஆனால் இந்திய பெளலர்களோ, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மூன்று ஸ்டம்ப்களை காட்டி விலகி எளிதாக கிளியர் செய்யும் அளவுக்கு மிக மோசமாக பந்து வீசினர்.
கட்டாய வெற்றி பெற வேண்டிய நாக்அவுட் போட்டிங்களில் பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும். இதில் ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டிய நிலையே உருவாகும். அந்த வகையில் பெளலிங்கில் இந்திய பேட்ஸ்மேன்களை ரன்குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதோடு, போட்டிங்கள் ஆரம்பம் முதலே இந்திய பெளலர்களிடம் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து வெற்றிக்கான முழு தகுதியும் கொண்ட அணி என நிருபித்துள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீரர்கள் ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியாக பார்முக்கு திரும்பி கலக்கினர். முதல் அரையிறுதி போட்டியில் தொடர் முழுக்க சொதப்பி வந்த பாகிஸ்தான் ஓபனிங் இணை பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற செய்தனர். அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டனும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான பட்லம் - ஹேல்ஸ் லீக் போட்டிகளில் பெரிதாக சாதிக்காத நிலையில் முக்கியமான அரையிறுதி போட்டியில் சிறப்பாக பேட் செய்து அணியை இறுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடின. இதைத்தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் பைனலில் மோதவுள்ளன.
மற்றொரு சிறப்பு வாய்ந்த விஷயமாக இருஅணிகளுக்கும் இது மூன்றாவது டி20 கோப்பை பைனலாக அமைந்துள்ளது.
டாபிக்ஸ்