Sandeep Lamichhane: பாலியல் வழக்கில் கைது - நேபாள வீரர் மீதான தடை நீக்க முடிவு
பாலியல் வழக்கில் கைதாகி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே மீதான தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்ற நேபாள அணியின் சுழற்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. பொக்காரா நகரில் நடைபெற்ற நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவர் பிரேந்திரா பகதூர் சந்த் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து வந்த சந்தீப் லிமிச்சானேவை, ரூ. 20 லட்சம் பிணை தொகையுடன் கடந்த 12ஆம் தேதி ஜாமினில் விடுவித்து பதான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக நோபால் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் தாக்கலான அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான கிரிக்கெட் வீர் சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு வைத்தே விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சந்தீப் லமிச்சானே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து காத்மண்டு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், விமான நிலையத்தில் வைத்து கடந்த அக்டோபர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்து நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு தேசிய அணியில் விளையாடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில் நடைபெற்ற டி20 லீக் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்திருப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவர் பிரேந்திரா பகதூர் சந்த், பொருளாளர் ரோஷன் சிங், செயலாளர் பிரசாந்த் மல்லா ஆகியோர் பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுத்தன.
இந்த சூழ்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற கிரிக்கெட் வீரர் மீதான தடை நீக்கம் நேபாள கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்