Wimbledon 2023: ஜோகோவிச்சை வீழ்த்தி..சரித்திரம் படைத்தார் அல்காரஸ்!
Wimbledon 2023 Final: விறுவிறுப்பாக நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் சாம்பியன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 2023 ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
இதில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இன்றைய ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றால் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மார்கரேட் கோர்ட்டின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், விம்பிள்டனில் 8 முறை பட்டம் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்ய வாய்ப்பு இருந்தது.
அனல் பறந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். விடாமல் விரட்டிய அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியை நிர்ணயிக்கும் 5ஆவது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார். இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்தவர்களுக்கும், டிவியில் பார்த்தவர்களுக்கும் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.
20 வயதான இளம் ஸ்பெயின் வீரரான அல்காரஸ் விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்