WTC 2023: ‘தரையில பட்டது அவுட்டா? பிடிச்ச எனக்கு தெரியாதா?’ கில் vs கிரீன் நேரடி எதிர்ப்பு!
கில் தனது அதிருப்தியை ட்விட்டர் மூலம் மறைமுகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேரடியாக தன்னுடைய அதிருப்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மான் கில்லை ஆட்டமிழக்க நியாயமான கேட்சை பிடித்ததாக கேமரூன் கிரீன் கூறியுள்ளார்.
நேற்று நடந்த போட்டியின் நான்காவது நாளில், தனது இன்னிங்ஸை டிக்ளர் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 444 ரன்களை நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களை எடுத்துள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை முடித்தது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று, இறுதி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. விராட் கோஹ்லி 44 ரன்களுடன் களத்தில் நிற்பது, இந்திய அணிக்கு பெரிய பலமாக உள்ளது. இதற்கிடையில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த போது, 8 ஓவர்களுக்குள் இந்தியா 41 ரன்கள் எடுத்திருந்த போது, போலண்ட் பந்தை அடிக்க முயன்ற கில், கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், கிரீன் ஒரு கையால் பிடித்த அந்த கேட்ச், பெரிய சந்தேகத்தை கிளப்பியது. டிவி.,யில் பந்து தரையில் படுவதைப் போல தெரிந்தாலும், மூன்றாவது நடுவர் கெட்டில்பரோ அதை கேட்ச் பிடித்தவருக்கு சாதகமாக்கி, கில் ஆட்டமிழந்ததாக உறுதி செய்தார். இதை இந்திய ரசிகர்கள் மற்றும் அணியைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றமான முடிவாக கருதினர்.
நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு, கில் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், கிரீன் பிடித்த கேட்ச்சின் படத்தை பதிவிட்ட அவர், அதில் பந்து தரையில் படுவதைப் போன்று இருப்பதை சுட்டிக்காட்டி, பூதக்கண்ணாடிகளை கேப்ஷனாக வைத்திருந்தார். போதாக்குறைக்கு தலையில் அடித்துக் கொள்வது போன்ற எமோஜியையும் அதில் பதிவிட்டிருந்தார்.
கில் தனது அதிருப்தியை ட்விட்டர் மூலம் மறைமுகமாக தெரிவித்திருந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேரடியாக தன்னுடைய அதிருப்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘டிவி அம்பயர் கெட்டில்பரோவின் அவசர முடிவு இது. முடிவை அறிவிக்க இன்னும் சிறிது நேரம் எடுத்திருக்கலாம். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, நீங்கள் விடுவித்தது ஒரு சாதாரண போட்டி அல்ல. இதைச் சிறப்பாகச் சரிபார்த்திருக்க வேண்டும். இது பெரிய விசயம் தான் ஆனாலும் பரவாயில்லை, இது விளையாட்டின் ஒரு பகுதி தான். இது அம்பயர்களைப் பற்றியது, அவர்கள் தான் முடிவுகளைஎடுக்கிறார்கள்,’’ என்று ஷமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சர்சைக்குரிய கேட்ச் குறித்து அதை பிடித்த கிரீன் கூறுகையில், ‘‘நான் நிச்சயமாக அந்த பந்தை பிடித்தேன். முடிந்தது என்று தெரிந்த பிறகு தான் பந்தை தூக்கி எறிந்தேன். வெளிப்படையாக கேட்ச் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அது மூன்றாவது நடுவரின் முடிவுக்கு விடப்பட்டு, அவரும் அதை உறுதி செய்தார்,’’ என்று கிரீன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.
‘‘இந்த போட்டியில் வெல்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
டாபிக்ஸ்