Presidential Poll: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு!
பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்.
புதுதில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், தி.மு.க., சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மக்கள் ஜனநாயக கட்சி, முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
கூட்டத்திற்கு பிறகு முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் ஆவார். அதன் பிறகு பா.ஜ.கவில் ஏற்பட்ட தலைமை மாற்றம் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸில் 2021ல் இணைந்தார்.
84 வயதான சின்ஹா தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணாமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தமக்கு கௌரவம் அளித்ததற்காக மம்தாவுக்கு நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவரும் போட்டியிட மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்