Wayanad: கேரளாவின் சூரல்மலாவில் பணிசெய்த மேஜர் சீதா ஷெல்கேவின் படங்கள் வைரலாக காரணம் என்ன?
Wayanad: கேரளாவின் சூரல்மலாவில் பணிசெய்த மேஜர் சீதா ஷெல்கேவின் படங்கள் வைரலாக காரணம் என்ன என்றால், பெங்களூருவைச் சேர்ந்த ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுமத்தைச் சேர்ந்த 70 பேர் கொண்ட குழுவில் மேஜர் சீதா அசோக் ஷெல்கே மட்டுமே பெண் அதிகாரி என்று கூறப்படுகிறது.
Wayanad: கேரள மாநிலம், வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் அல்லது ஃப்ரீ ஃபேரிகேட்டட்(Bailey bridge Or Prefabricated Bridge) தண்டவாளங்களில் ஒரு பெண் இந்திய இராணுவ அதிகாரி பெருமையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவம்:
வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா கிராமத்தில் பாலம் கட்டுமானப்பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு, அதனை கட்டிமுடித்தனர்.
பாலம் கட்டுவதற்கு பொறுப்பான இந்திய இராணுவப் பிரிவில் உள்ள ஒரே பெண் அதிகாரியான மேஜர் சீதா அசோக் ஷெல்கேவின் படங்கள் இந்த பேரழிவுப் பணிகளுக்கு மத்தியில் தனித்து நின்று கவனம் ஈர்த்தன. மேஜர் சீதா அசோக் ஷெல்கேவின் இந்திய ராணுவப் பணியையும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி சமூக ஊடகப் பயனர்கள் பலரும் அவரை பாராட்டித் தள்ளுகின்றனர்.
யார் இந்த மேஜர் சீதா அசோக் ஷெல்கே?
- மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் உள்ள காதில்கான் கிராமத்தைச் சேர்ந்தவர், மேஜர் சீதா அசோக் ஷெல்கே.
- பெங்களூருவைச் சேர்ந்த ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பின் (எம்.இ.ஜி) 70 பேர் கொண்ட குழுவில் உள்ள ஒரே பெண் அதிகாரி மேஜர் சீதா அசோக் ஷெல்கே என்று கூறப்படுகிறது.
- ‘மெட்ராஸ் சேப்பர்ஸ்’(‘Madras Sappers’) என்று அழைக்கப்படும் இந்த பொறியியல் பிரிவு இராணுவத்திற்கு வழி வகுத்தல், பாலங்கள் கட்டுதல் மற்றும் போர் முனையில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரிவு இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு நடவடிக்கைகளிலும் உதவுகிறது மற்றும் 2018 வெள்ளத்தின்போது கேரளாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.
- மெட்ராஸ் இன்ஜினியர் குழுவானது (Madras Engineer Group) கட்டட இடிபாடுகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் வேகமாக ஓடும் நதி ஆகியவற்றைக் கடந்து வெறும் 31 மணி நேரத்தில் பாலத்தின் கட்டுமானத்தை முடித்தது. மேஜர் சீதா அசோக் ஷெல்கே அங்கு வீரர்கள் குழுவை வழிநடத்தினார். அந்த கட்டுமானத்தை எழுப்ப அங்கு இருந்த ராணுவ வீரர்கள் அயராது உழைத்தனர்.
- மேஜர் சீதா அசோக் ஷெல்கே, இராணுவத்தின் வெற்றிக் கதையாக மட்டும் பாலத்தின் கட்டுமானத்தை கருதவில்லை.
- "பல்வேறு இடங்களில் இருந்து எங்களுக்கு உதவிய அனைத்து உள்ளூர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். உள்ளூர் மக்கள், கிராமவாசிகள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு சிறப்பு நன்றி" என்று மேஜர் சீதா ஷெல்கே கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மேஜர் ஷெல்கே பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடைவிடாது பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு அவசரத்தையும் கவனித்துக்கொள்கிறார். தூக்கம் மற்றும் வழக்கமான உணவைக் கூட விட்டுவிடுகிறார்.
- அவரும் அவரது குழுவினரும் அயராது உழைத்தனர். இதனால் பலரைக் காப்பாற்றவும், இறந்தவர்களின் உடல்களை அதிக தாமதமின்றி மீட்கவும் ராணுவத்தினரால் முடிந்தது என்பதுவே நிதர்ஷனம்.
- அதிக மழை மற்றும் பாலம் கட்டுவதற்கான குறைந்த இடம் காரணமாக இந்த பெய்லி பாலத்தை கட்டுமானம் செய்வது பெரிய சவால்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. இந்த தடைகள் இருந்தபோதிலும், மேஜர் ஷெல்கே மற்றும் அவரது குழுவினர் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்தை உறுதி செய்ய முடிந்தது. இது நடந்துகொண்டிருக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒரே பாதையாக உள்ளது.
- மேஜர் ஷெல்கே, தான் பெண் என்று தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. வயநாடு நிலச்சரிவு தளத்தில் தனது ஆண் சகாக்களைப் போலவே பணியாற்றி வருகிறார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்