குளிரை சமாளிக்க மக்களுக்கு உதவ இப்படியொரு யோசனை.. நிறைவேற்றிய உ.பி. முதல்வர்!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் விநியோகம் செய்வதற்காக 4.96 லட்சம் போர்வைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வாங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 4.96 லட்சம் போர்வைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வாங்கியுள்ளது. அவற்றில் 2.86 லட்சத்துக்கும் மேற்பட்ட போர்வைகள் ஏற்கனவே ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப் பொழிவும் கடுமையாக இருக்கிறது. சாலையே தெரியாத அளவுக்கு பனிப் புகை சூழ்ந்திருப்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இதையடுத்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், போதிய போர்வைகள் அளிக்கவும் தேவைப்பட்டால் திறந்தவெளியில் தீ ஜுவாலையை ஏற்படுத்தி ஏழை மக்களின் குளிரைப் போக்க உதவுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இரவு நேரங்களில் தங்குவதற்கு வசதியான இடங்களை ஏற்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, அரசு அதிகாரிகள் போர்வைகளை உரிய பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அரசிடமிருந்து போர்வைகள் சென்றடைந்துள்ளன. அதிகபட்சமாக ஜனவரி முதல் வாரம் வரை ஹர்தோயில் 16,379 போர்வைகளும், பிரயாக்ராஜில் 9,894 பேருக்கும், ரேபரேலியில் 8,715 பேருக்கும், சீதாபூரில் 7,560 பேருக்கும் குளிரில் இருந்து பாதுகாக்கும் வகையில் போர்வைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூருக்குச் சென்று இரவு தங்குமிடங்களின் நிலையை ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகள், இரவு நேர தங்குமிடங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதி செய்து வருகின்றனர்.
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சித் தலைவர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மூலம் போர்வைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன.
முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க அனைத்து இரவு தங்குமிடங்களிலும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.