Odisha Accident : ஒடிசா விபத்து – ஆய்வு செய்த மத்திய அமைச்சர் – தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரி விசாரிக்க உத்தரவு
ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது.
இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.