Karnataka: 18 மணி நேர போராட்டம் .. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka: 18 மணி நேர போராட்டம் .. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

Karnataka: 18 மணி நேர போராட்டம் .. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

Karthikeyan S HT Tamil
Apr 04, 2024 02:40 PM IST

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடாகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கர்நாடாகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லக்சனா கிராமத்தில் சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தனது வீட்டின் அருகில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி விழுந்துள்ளது.

நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது தெரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

முதல்கட்டமாக மீட்புப் பணியை மேற்கொள்ளும்போது குழாய் வழியாக குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்கினர். பின்னர் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய கேமரா அனுப்பி அதன் மூலம் சிறுவனை கண்காணித்தனர். ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தலைகீழாக இருப்பது கேமரா காட்சி பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்க அதிகாரிகள் சுமார் 21 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழியை தோண்டியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்களும் சம்பவ இடத்தில் குழந்தையை மீட்கும் முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் கூடியிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் படையும் நிறுத்தப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட ஒரு மருத்துவக் குழு, குழந்தையின் காயங்கள் மற்றும் அதிர்ச்சியை மதிப்பீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சரியான நிலை இன்னும் அறியப்படவில்லை. "கேமரா மூலம் அவரது காலின் இயக்கத்தை எங்களால் பார்க்க முடிந்தது" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி முன்பு கூறியிருந்தார்.

இந்த நிலையில், 18 அடி ஆழத்தில் தலைகீழாக குழந்தை சிக்கியிருந்த நிலையில், பக்கவாட்டில் குழி தோண்டி, கீழிருந்து மேலே சென்று குழந்தையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதியின் குழந்தை தான் சாத்விக். சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தண்ணீர் தேவைக்காக சங்கரப்பா, விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதிதாக ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டியிருக்கிறார். ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்த நிலையில் தான் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.