ரயில், தந்தி, அஞ்சல் துறைகளை உருவாக்கிய டல்ஹவுசி பிரபுவின் நினைவுநாள் இன்று!
நவீன இந்தியாவை கட்டமைத்த டல்ஹவுசி பிரபுவின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பிரவுன் ராம்சே என்ற பெயர் கொண்டவர்,டல்ஹவுசி பிரபு. இவர், ஸ்காட்லாந்தில் ஜார்ஜ் ராம்சே மற்றும் கிறிஸ்டியன் பிரவுன் தம்பதியின் மூன்றாவது மகனாக ஏப்ரல் 22, 1812ஆம் ஆண்டு பிறந்தார்.
ஜார்ஜ் ராம்சே கனடாவின் கவர்னர் ஜெனரல் ஆக பணியாற்றியவர். மேலும், இவர் பிரிட்டனில் 1815ஆம் ஆண்டு, டல்ஹெசி கோட்டையைக் கட்டினார். இவரது முதல் இரண்டு மகன்கள் நோய்த்தொற்றால் இறந்தனர்.
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பிரவுன் ராம்சே என்னும் டல்ஹவுஸி பிரபுவின் சிறுவயது கனடாவில் தந்தை ஜார்ஜ் ராம்சே மற்றும் தாய் கிறிஸ்டியன் பிரவுனுடன் கழிந்தது. பின், அவர் ஸ்காட்லாந்திற்கு திரும்பியவுடன் 1825ல் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பின், 1829ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு, இக்கல்லூரி பல நல்ல வாழ்நாள் நண்பர்களைத் தந்தது எனலாம்.
இவர் நான்காம் வகுப்பில் கல்லூரியில் சேர்க்கப்பட்டாலும், தேர்ச்சிப் பட்டத்திற்காக நுழைவதில் திருப்தி அடைந்தார்.
இளம் வயதில் இந்திய தலைமைக் கவர்னர்:
டல்ஹவுசி பிரபு, இந்தியா மற்றும் வங்காளத்தின் தலைமை ஆளுநராக 1848ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார். அப்போது ஒவ்வொரு நாளும் 16 மணி முதல் 18 மணி நேரம் வரை கடுமையாக உழைத்து, இந்தியாவின் நிர்வாகத்தை சீரமைத்தார். மதிய உணவுக்குக் கூட அவர் மேஜையில் இருந்து எழுந்தது இல்லை எனக்குறிப்புகள் கூறுகின்றன. இவர் நில இணைப்புக் கொள்கையை நிறுவி ஆண் வாரிசு இல்லாத சிறு ராஜ்யங்களை பிரிட்டிஷ் அரசின்கீழ் இணைத்தார்.
இந்தியாவின் தேசிய கல்விக்கொள்கையை மறுசீரமைப்பதில் டல்ஹவுசி பிரபுவுக்கு தனிப்பட்ட அக்கறை இருந்தது. பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். இருபாலர் பள்ளி மற்றும் மகளிர் பள்ளிகளை உருவாக்கினார். விதவைகள் மறுமணச்சட்டத்தை ஆதரித்தார்.
நவீன இந்தியாவை கட்டமைத்தவர், டல்ஹவுசி பிரபு எனலாம். இவர் பொதுப்பணித்துறையினை இந்தியாவில் நிறுவி, 1853ஆம் ஆண்டு டல்ஹவுசி ரயில்வே அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டார். 1853ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் ரயில் பாதை மும்பை முதல் தானே வரையிலான பாதை இவரது நடவடிக்கையால் உருவாக்கப்பட்டது. பின், 1854ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா முதல் ராணிகஞ்ச் வரையும், 1856ஆம் ஆண்டு சென்னை முதல் அரக்கோணம் வரையும் ரயில்பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன. இதனால் இவர் நவீன இந்தியாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
டல்ஹவுசி பிரபுவின் நிர்வாகத்தின்போது கங்கை கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.மேலும் இவர் மருத்துவத் துறையை சீரமைத்தார். ஒவ்வொரு மாகாணத்திலும் பொதுப்பணித்துறையை உருவாக்கி, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெஷாவர், கொல்கத்தா தந்தி சேவை மூலம் இணைக்கப்பட்டன.
1854ஆம் ஆண்டு புதிய அஞ்சலக சட்டம் உருவாக்கப்பட்டு, தபால் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இவர் குறைந்த தபால் தலைகளுடன் கடிதப்போக்குவரத்தினை ஆதரித்தார். இவரது முன்மொழிவால் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் 1857ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இந்தியாவில் கவர்னராக இருந்த டல்ஹவுசிபிரபு மார்ச் 1856-ல் பிரிட்டனுக்குத் திரும்பினார். ஒரு வருடம் கழித்து இந்தியாவில் சிப்பாய்க் கலகம் வெடித்தது.மேலும் டல்ஹவுசி இந்தியாவில் அவரது கொள்கைகளுக்காக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் 19 டிசம்பர் 1860ஆம் ஆண்டு, டல்ஹவுசி பிரபு , தனது 48ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
டாபிக்ஸ்