International Widows Day: இன்னும் வாழ்க்கை இருக்கிறது பெண்களே.. உறுதியோடு முன்செல்லுங்கள்.. சர்வ தேச கைம்பெண்கள் தினம்
The Theme of International Widows Day 2023: இந்த ஆண்டு"பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்படுகிறது.
மனித சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களில் ஒரு பகுதியினர் கைம்பெண்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை சமூகத்தின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று சர்வ தேச கைம்பெண் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கைம்பெண்களின் நிலை குறித்து இங்கு பார்ப்போம்.
மனித குல வரலாற்றில் ஆதிகாலம் தொட்டு தாய்வழி சமூகம் இருந்து வந்த நிலையில் காலப்போக்கில் தந்தை வழி சமூகம் உருவானது. அப்போதிருந்தே சமூகத்தின் சரிபாதியாக இருந்த பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கப்பட்டனர்.
காலம் காலமாக பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பதை இங்கு யாராலும் மறுக்க முடியாது.
இதுவே உலகம் முழுவதும் உள்ள பெண்களின் நிலை ஆகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்போது பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. ஆனால் இந்த வீச்சின் வேகம் போதுமா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.
சாதாரணமான பெண்களின் நிலையே இது என்றால் கணவனை இழந்த பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம் தான். உலகம் முழுவதும் பெண்களின் வாழ்க்கையை நிர்வகிப்பதில் கணவரின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்பதை இங்கு யாரும் மறுத்து விட முடியாது. அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான பெண்களின் உலகம் கணவர் குழந்தைகள் என்பதாகவே உள்ளது. அதிலும் கணவரை இழந்த பெண்களை இந்த சமூகம் ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்ததை போலத்தான் பார்க்கிறது என்பதில் ஐயம் இல்லை. கணவரின் மரணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் பெரும் இழப்புதான். அது வாழ்நாள் வலி தான். ஆனால் அதையும் கடந்து அந்த பெண்களுக்கென்று தனி ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் அவர்கள் பயணிக்க உடன் இருப்பவர்கள் உதவ வேண்டும் என்பதே மனிதாபிமானம்.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் பல்வேறு மூடப்பழக்கவழக்கங்கள் உள்ளது. அதில் சதி உள்ளிட்ட பெரும்பாலான நடவடிக்கைகள் இன்று சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டிருந்தாலும் இன்றும் கணவரை இழந்த பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளது. இது கைம்பெண்கள் தங்களை தாங்களே ஏதோ குறை உள்ளவர்கள் போல் கருதச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தான் உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி கைம்பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்தும் அவர்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் கைம்பெண்கள் தினத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் உலக தலைவர்கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக காபூல் நாட்டின் மறைந்த அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வையோ பூன்கோ ஓடிம்பாவின் கோரிக்கை படி ஐ,நா பொதுச்சபைக் கூட்டத்தில் 195 பிரதிநிதிகள் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 2010 ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி சர்வதேச கைம்பெண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு"பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் குறைந்த பட்சம் நம் அருகில் உள்ள கைம்பெண்களின் முன்னேற்றத்திற்கேனும் உதவுவது என நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்