TN CM Stalin:'பாஜகவை விடப்பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை' - மும்பை இந்திய கூட்டணியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்திய ஒற்றுமை நியாயப் பயண நிகழ்வில், மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நியாயப் பயண நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கெடுத்தார்.

மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாயப் பயண நிகழ்வில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.
ராகுல் காந்தி அவர்கள் எங்குசென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி, தன் பயணத்தைத் தொடர்ந்தார்.