Telangana Elections 2023: ’கரைசேருவாரா KCR!’ மல்லுக்கட்டும் காங்! பாஜக! தெலங்கானா தேர்தல் நிலவரம் இதோ!
“Telangana Elections 2023: 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்”
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 221 பெண் வேட்பாளர்களும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.
ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 103 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவர்.
முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியும், கஜ்வெல் தொகுதியில் பாஜக தலைவர் எட்டலா ராஜேந்தரும் கேசிஆருக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் உருவானது முதல், அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் தனிநபர் வருமானம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் என சந்திரசேகரர ராவ் பரப்புரையில் ஈடுபட்டார்.
தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரச்சாரம் வேகம் பிடித்துள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு நான்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 21 வயது ஆன பிறகு ரூ.2 லட்சம், ஐந்தாண்டுகளில் 2.5 லட்சம் அரசு வேலைகள், குவிண்டாலுக்கு ரூ.3100க்கு நெல் கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. இதுமட்டுமின்றி பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ரூ 2,500 மாதாந்திர நிதி உதவித் தொகை உள்ளிட்ட உத்தரவாதங்களையும் அளித்துள்ளது.
மாநில மக்கள் ஆதரவு கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்பது பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது.