உச்சம் தொட்டது பெட்ரோல் விலை! இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு.
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.420 ஆகவும், டீசல் விலை ரூ.400 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தீவு தேசமான இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு பெருமளவு குறைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான பணத்தை கூட அந்நாட்டு அரசால் செலுத்த முடியவில்லை. இதனால் பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 13 மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. இருப்பினும் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் உள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கமாகி வருகின்றன.
இந்தநிலையில் எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை எனப் பல பிரச்னைகளுக்கு மத்தியில் எரி பொருளுக்கான தீர்வு காண வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு பெட்ரோல், டீசல் விலையைத் மீண்டும் உயர்த்தியுள்ளது.
ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.420க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 38.4 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலை 400 ரூபாயாக உள்ளது. இது எப்போதும் இல்லாத அதிகப்படியான விலை உயர்வாகும்.
இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கை துணை நிறுவனமான லங்கா ஐஓசியும் எரிபொருளின் சில்லறை விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்