Sonia Gandhi: எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளதாக சோனியா தாக்கு
கடந்த ஒரு வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது" என்று கடும் விமர்சனத்தை கூறினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்விதான் சதன் சென்ட்ரல் ஹாலில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், “நியாயமான கோரிக்கையை எழுப்பியதற்காக இவ்வளவு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவையில் இருந்து இதற்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதே இல்லை" என்றார்.
டிசம்பர் 13 பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சமீபத்திய தொகுதியில், என்சிபியின் சுப்ரியா சுலே, காங்கிரஸின் சசி தரூர் மற்றும் மணீஷ் திவாரி உட்பட 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை குளிர்கால கூட்டத் தொடரின் எஞ்சிய பகுதிக்கு போராட்டம் நடத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறலுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, நடந்தது மன்னிக்க முடியாதது, நியாயப்படுத்த முடியாது என்றார். நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை அவர் மேலும் கடுமையாக சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார், "சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது" என்றும், இந்த பிரச்சனையில் சண்டையிட வேண்டாம் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கோரிய பிரதமர் மோடி, இந்தி நாளிதழான 'டைனிக் ஜாக்ரன்'க்கு அளித்த பேட்டியின் போது, "நடந்தது மிகவும் தீவிரமானது... இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.
இதற்கிடையில், டிசம்பர் 13 சம்பவத்தைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்கும், "சிலர் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய விரும்புவதில்லை" என்றும் எதிர்க்கட்சிகள் மீது மோடி எதிர்ப்பு கருத்தை தெரிவித்தார் . பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் "அரசியல் அழுத்தம்" கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார், "அவர்கள் மீண்டும் மக்களவைக்கு வரமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என்று கூறினார் பிரதமர் மோடி.
டாபிக்ஸ்