Singappenney: இந்தியாவின் அடுத்த இந்திரா காந்தியாக மிளிர்வாரா பிரியங்கா?
பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார் என்பதை உண்மை. அவர் இந்திரா காந்தியை போல் அரசியலில் மிளிவாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதைப்போல அரசியல் எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி காலம் காலமாக அரசியலில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியான பெண் அரசியல் ஆளுமைகளை திரும்பி பார்க்கும் ஒரு முயற்சியே இது. அந்த வகையில் இன்று பிரியங்கா காந்தி குறித்து பார்க்கலாம்.
ராஜூவ் காந்தி, சோனியா தம்பதியின் மகள். இந்திராகாந்தி பெரோஸ் தம்பதியின் பேத்தி பிரியங்கா காந்தி. அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
1972ல் ராஜீவ் காந்தி சோனியா காந்திக்கு இரண்டாவது மகளாக பிறந்தார் பிரியங்கா காந்தி.
கல்வி
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகள் காரணமாக பிரியங்காவும் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் பள்ளிக்கு சென்று படிக்கும் வாய்ப்பை இழந்தனர். அதுமட்டும் இல்லாமல் எப்போதும் பாதுகாவலர்கள் புடை சூழ அவர்களது இளமை பருவம் கழிந்தது. இதனால் வீட்டில் இருந்த படியே கல்வியை தொடர்ந்தனர்.
பிரியங்கா டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். பவுத்தத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பொழுது போக்கு வானொலி ஒன்றில் சிலகாலம் இயக்குநராக பணியாற்றினார்.
திருமணம்
இளமைப்பருவம் முதல் தனது நண்பரான தொழிலதிபர் ராபர்ட் வதேராவை 1997ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரைஹன் மற்றும் மிராயா இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அரசியல்
பிரியங்கா தனது 16 ஆவது வயது முதல் அரசியல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க தொடங்கினார். 1999ம் ஆண்டு பிபிசி வானொலி க்கு பேட்டியளித்த பிரியங்கா நான் மனதளவில் மிக தெளிவாக இருக்கிறேன். மக்களை நான் விரும்புகிற அளவிற்கு அரசியல் என்னை ஈர்க்கவில்லை. அரசியலில் இல்லாமலே அவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளை செய்ய முடியும். ஆகவே நான் ஆயிரம் முறை சொல்லி விட்டேன் நான் அரசியலில் சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர்
இந்த பேட்டி வெளியாகி சரியாக 20 ஆண்டுகள் கழித்து 2019ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேரு காந்தி குடும்பத்தின் 14ஆவது நபராக அரசியலில் தடம் பதித்துள்ளார் பிரியங்கா. பிரியங்கா காந்திக்கு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கான பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சோனியாகாந்தி பிரச்சார மேலாளராக இருந்தார். மேலும் அவரது சகோதரர் ராகுல் காந்தி பிரச்சாரத்தையும் மேற்பார்வையிட உதவினார். பின்னர் 2007ல் உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில் அமேதி ரேபரேலி பகுதியில் பத்து தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 2009ல் அமேதி பிராந்தியத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சாரம் செய்தார்.
2012ம் ஆண்டு உபி சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர பிரச்சாரகராக அமேதியில் இருந்து சுல்தான்பூன் வரை பிரச்சாரம் செய்தார்.
இதுமட்டும் இல்லாமல் கடந்த 2014 ,2017, 2019ம் ஆண்டு நடந்த தேர்களிலும் தொடர்ச்சியாக நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
இன்று வரை ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பிரியங்கா காந்தி 2008 வேலூர் சிறையில் நளினியுடன் நடந்திய ரகசிய சந்திப்பு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போதும் சராசரி மனுஷியாய் தந்தையை பறிகொடுத்த தன் பரிதவிப்பை வெளிப்படையாக உலகுக்கு உணர்த்தினார்.
பிரியங்கா எப்போதும் காட்டன் உடைகளை அதிகம் விரும்பி அணிபவர். தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது தந்தையின் பாணியில் தடைகளை மீறி மக்களோடு உரையாட விரும்புபவர். பிரிங்காவின் ட்விட்டர் பக்கத்தை லட்ச கணக்கான மக்கள் பின் பற்றிய போதும் இவர் மிகவும் குறைந்த நபர்களை மட்டும் பின்பற்றும் பழக்கம் உடையவர். கிட்டத்தட்ட தனது பாட்டி இந்திரா ஸ்டைலில் அவரது நகலாக இருக்கும் பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார் என்பதே உண்மை. அவர் இந்திரா காந்தியை போல் அரசியலில் மிளிவாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9