இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

Karthikeyan S HT Tamil
May 12, 2022 08:43 PM IST

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.

<p>இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே</p>
<p>இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே</p>

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, எண்ணெய், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சே உள்ளிட்ட ராஜபட்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து திடீர் திருப்பமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்சே கடந்த 9-ம் தேதி ராஜிநாமா செய்தார். இருப்பினும் போராட்டக்காரர்கள் ராஜபட்சேவின் பாரம்பரிய வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து கொழும்பு உள்பட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, வன்முறை பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டம், வன்முறை சம்பவங்கள் என காட்சியளித்த இலங்கையின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோத்தபய ராஜபட்சே தீவிரம் காட்டி வந்தார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தார். இருப்பினும் அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அதிபரை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபட்சே கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிபர் முன்னிலையில் இலங்கையின் 26-வது பிரதமராக ரணில் இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6-வது முறையாக அவர் பிரதமராகியுள்ளார். மேலும், 15 பேர் அடங்கிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்துக்கள். இந்த இக்கட்டான சூழலில் நாட்டை சிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.