Karnataka Bandh: அதிரவைக்கும் காவிரி விவகாரம்..வாட்டாள் நாகராஜை அதிரடியாக கைது செய்த போலீசார்!
Vatal Nagaraj Arrested: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டவுன்ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை முதல் பந்த் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முழு பந்த் நடைபெறுவதை அடுத்து மாநில எல்லைகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்துக்குள் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட 1800-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துனர்.
மேலும், பேருந்துகளும், வாடகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. போலீசாரின் பாதுகாப்பையும் மீறி கன்னட அமைப்பினர் ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பெங்களூருவில் பதட்டம் நிலவுகிறது.
அசம்பாவிதங்களை தடுக்க பெங்களூரில் இன்று144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் டவுன்ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் பெங்களூருவில் கடந்த 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்