தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Priyanka Gandhi: தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி? வெளியான தகவல்

Priyanka Gandhi: தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி? வெளியான தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 14, 2024 02:15 PM IST

பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் நுழைவது குறித்த பேச்சு தேர்தலுக்கு முன்பே கவனத்தை ஈர்த்தது. தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியின் வெற்றியை தக்க வைத்து கொண்டால், வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி என பரவும் தகவல்
தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டி என பரவும் தகவல் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு தொகுதிகளிலும் மிகப் பெரிய வெற்றி

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியின் வெற்றியை தக்க வைத்துக் கொண்டால், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாடு தொகுத்திக்கு இடைத்தேர்தல் நடைபெறும். இதில் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என ஆதாரங்களை மேற்கோள் காட்டி என்டிடிவி நிறுவனம் செய்து வெளியிட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலி, கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி, இந்த இரண்டு தொகுதிகளிலும் மிக பெரிய வெற்றியை பெற்றார்.

மோடி தோல்வி அடைந்திருப்பார்

முன்னதாக, வாரணாசி தொகுதியில் தனது சகோதரியான பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டிருந்தால், "இரண்டு முதல் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்" மிகப்பெரிய தோல்வியை மோடி சந்தித்திருப்பார் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உடன்பிறப்புகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், இருவரும் போட்டியிட வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருக்கும் மேற்கூறிய தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவில்லை என்றால் கட்சித் தொண்டர்கள், காங்கிரஸ் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிர்மறையாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

வாரிசு அரசியல் சர்ச்சை

இந்த சூழ்நிலையில், பிரியங்கா காந்தி இறுதி நேரத்தில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். ஒரு வேளை தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால், ஒரே நேரத்தில் மூன்று காந்திகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றுவார்கள் (அவரது தாய், சகோதரர் மற்றும் அவர்), காங்கிரஸ் கட்சி மீதான வாரிசு அரசியல் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துவிடும் என கருதி இந்த முடிவை பிரியங்கா எடுத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

வயநாட்டில் இருந்து இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வாத்ரா போட்டியிடுவதற்கான வாய்ப்பு, ராகுல் காந்தி அந்த தொகுதியை விட்டு கொடுப்பதற்கான முடிவை பொறுத்தே அமைகிறது. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும், ராகுலுக்கு வெற்றியைக் கொடுத்த தொகுதியாக வயநாடு உள்ளது.

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல்

இந்த சூழலில், தனது இறுதி முடிவு இரு தொகுதிகளின் வாக்காளர்களையும் திருப்திப்படுத்தும் என்று ராகுல் கூறியுள்ளாரம். தேசிய அரசியலில் உத்தரபிரதேசத்தின் முக்கியத்துவம் காரணமாக அவர் ரேபரேலியை தொகுதியை தேர்ந்தெடுத்து தக்க வைத்து கொள்வார் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமேதியில் இருந்து வென்ற கிஷோரி லால் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன் ஆகியோரும் இதற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரியங்கா போட்டி

எனவே வயநாடு தொகுதியை ராகுல் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அதில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.