Modi thanks Elon Musk: ’கார் வியாபாரத்துக்கு துண்டு போட்ட எலான் மஸ்க்!’ சட்டென மோடி அளித்த பதில்!
Modi thanks Elon Musk: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களுக்கு பிறகு நாளை பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து உள்ளார்
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்திய டெஸ்லா தலைமை அதிகாரியான எலான் மஸ்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.
நாளை மீண்டும் பிரதமராகும் மோடி
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்று உள்ளது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றது. யாருக்கும் பெருமான்மை கிடைக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு உடன் பாஜக ஆட்சி அமைக்க உரிமைகோரி உள்ளது. நாளை மாலை 7 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மோடிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்! இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்." என பதிவிட்டு இருந்தார்.
எலான் மஸ்கிற்கு பிரதமர் மோடி பதில்
எலான் மஸ்க்கின் விருப்பத்தைப் பாராட்டிய மோடி, நாட்டின் இளைஞர்கள், யூகிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் நிலையான ஜனநாயக கொள்கைகள் ஆகியவை வணிகக் கூட்டாளிகளுக்கு வணிகச் சூழலைத் தொடர்ந்து வழங்கும் என உறுதி அளித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உங்கள் வாழ்த்துக்களைப் பாராட்டுகிறேன் எலான் மஸ்க். திறமையான இந்திய இளைஞர்கள், நமது மக்கள் தொகை, யூகிக்கக்கூடிய கொள்கைகள் மற்றும் நிலையான ஜனநாயக அரசியல் ஆகியவற்றை எங்கள் அனைத்து கூட்டாளர்களுக்குமான வணிக சூழலை தொடர்ந்து வழங்குவோம்" என்று கூறி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஆதரவு கடிதங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கி உள்ளனர்.
இந்தியாவுக்கு வரும் டெஸ்லா நிறுவனம்
இதற்கிடையில், எலான் மஸ்க் தனது முதல் இந்திய டெஸ்லா ஆலையை மகாராஷ்டிரா, குஜராத் அல்லது தமிழ்நாட்டில் நிறுவுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆட்டோமொபைல் தயாரிப்பாளரின் சாத்தியமான $3 பில்லியன் முதலீடு இந்த ஆண்டின் தொடக்கத்தில், குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்ய உறுதியளிக்கும் கார் தயாரிப்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சில மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா குறைத்த நேரத்தில் வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் மாதம் 20 மற்றும் 22ஆம் தேதிகளுக்கு இடையில் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வரவிருந்தார். ஆனால் அவரது பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. டெஸ்லா நிறுவனத்தில் பொறுப்புகள் இருப்பதாகக் கூறி அவர் தனது பயணத்தை ரத்து செய்தார், மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டிற்குச் செல்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
எலான் மஸ்க் தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.