MP cabinet news: மத்திய பிரதேசத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான புதிய மத்திய பிரதேச அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான புதிய மத்திய பிரதேச அமைச்சரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதுமான் சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், கைலாஷ் விஜய்வர்கியா, குவார் விஜய் ஷா, ராகேஷ் சிங், கரண் சிங் வர்மா, உதய் பிரதாப் சிங், விஸ்வாஸ் சாரங் உள்ளிட்ட 18 தலைவர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 6 பேர் இணை அமைச்சர்களாகவும் (தனிப்பொறுப்பு) 4 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “இன்று நல்லாட்சி தினம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள். மத்தியப் பிரதேச அரசின் கேபினட் அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் இன்று அமைக்கப்படும் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரை ம.பி முதல்வர் மோகன் யாதவ் நேற்று சந்தித்தார்.
தற்போது, அமைச்சரவையில் முதல்வர் மோகன் யாதவ் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள், ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகிய மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வழிகாட்டுதலை முதல்வா் மோகன் யாதவ் இன்று பெற்றுள்ளாா். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடந்து வருகிறது.
230 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் அமைச்சரவையின் அதிகபட்ச பலம் முதல்வர் உட்பட 35 ஆக இருக்கலாம். கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 163 இடங்களிலும், காங்., 66 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுக்லா, தேவ்தா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.