Maoists weekly festival : மாவோயிஸ்டுகள் வெளியிட்ட வீடியோ - அதிர்ச்சியில் அரசு!
ஆந்திரா,சத்தீஸ்கர் எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் வார உற்சவம் நடத்தி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் செயல்பாடு தற்போதும் உள்ளது. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விட்டோம் என்று மத்திய மாநில அரசுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் மரணமடைந்த மாவோயிஸ்டுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வார உற்சவம் என்ற பெயரில் ஒரு வார காலம் மரணமடைந்த மாவோயிஸ்டுகளின் நினைவு நாளை அனுசரிப்பது அந்த இயக்கத்தின் வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஆந்திரா, சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ள வன பகுதியில் வார உற்சவ நிகழ்ச்சிகளை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று சட்டிஸ்கர், ஆந்திரா மாநில எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் வார உற்சவம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளையும் தாங்கள் இயக்க கொடிகளையும் கைகளில் பிடித்து முன் செல்ல அவர்களின் பின்னால் பொதுமக்களும் ஏராளமான அளவில் செல்கின்றனர். இது தொடர்பான வீடியோவை மாவோயிஸ்ட் இயக்கம் வெளியிட்டுள்ளது.
வார உற்சவம் நிகழ்ச்சியில் மாவோயிஸ்டுகளுடன் கிராம மக்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.