Mangal Pandey : மாவீரன் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட நாள் இன்று…
Death Anniversary : பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே "தியாகி" எனப் பின்னால் கருதப்பட்டார். மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்தன.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிப்பாய் கலகத்தின் பங்களிப்பு அளப்பரியது. கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை அடிமைப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்த சமயத்தில், மக்களுக்குள் விடுதலைப் புரட்சிக்கான விதையைத் தூவிய முக்கிய நிகழ்வுகளில் சிப்பாய் கலகமும் ஒன்று. அதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர்தான் மங்கள் பாண்டே.
1827ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்த இவர், 1849ல் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது 22 வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34 வது பிரிவில் பணிபுரிந்தார்.
அப்போது கல்கத்தாவின் பரக்பூர் நகரில் 1857ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்ற சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும், முதலில் காணும் வெள்ளைக்காரரை சுடப் போவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் அளித்தான்.
இதையடுத்து கிளர்ச்சிக்கு திட்டமிட்டுள்ள சிப்பாய்களை தாக்குவதற்காக லெப்டினன்ட் போ தனது குதிரையில் ஏறி வாளை உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கி புறப்பட்டான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே, அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டார். எனினும், அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே, தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினார். எனினும், பாண்டே கைது செய்யப்பட்டார். ஒரு வார விசாரணைக்கு பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1857ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார்.
அவர் சிப்பாயாக இருந்த ஆறாவது கம்பெனி முற்றிலுமாக கலைக்கப்பட்டது நீதிமன்றத்தில் தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றும் தான் தனியாகவே செயல்பட்டதாகவும் மங்கள் பாண்டே ஒப்புக்கொண்டார். பிரிட்டிஷார் அஞ்சியது வீண்போகவில்லை. மே மாத கடைசியில் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க்கலகம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. 1858 வரை நீடித்த கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும், இது ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்திய வரலாற்றில் அமைந்தது. கிழக்கிந்திய கம்பெனியை, பிரிட்டிஷ் அரசாங்கம் கலைத்து, நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா முடிசூட்டிக் கொண்டார். இந்திய அரசுச் சட்டம் 1858 நடைமுறைக்கு வந்தது.
பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே "தியாகி" எனப் பின்னால் கருதப்பட்டார். மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்தன. The Rising என்ற திரைப்படம் 2005ம் ஆண்டு வெளிவந்தது. மங்கள் பாண்டே நினைவாக 1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இந்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை, உறை ஆகியவை வெளியிடப்பட்டன.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். மங்கள் பாண்டேவின் நினைவு தினமான இன்று ஹெச்டி தமிழ் அவரை வணங்குகிறது.
டாபிக்ஸ்