மகாராஷ்டிராவில் முன்னாள் கவுன்சிலரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ. - காவல் நிலையத்தில் நடந்த கொடூரம்!
காவல் நிலையத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் உள்ள ஹில்லைன் காவல் நிலையத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கெய்க்வாட் மற்றும் ஒரு ஆதரவாளர் ஐந்து தோட்டாக்களால் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் மூத்த ஆய்வாளர் அனில் ஜக்தாப் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் மற்றும் நகரத் தலைவர் மகேஷ் கெய்க்வாட் இடையே நடந்த உரையாடலின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சிவசேனா தலைவர் படுகாயமடைந்து தானேவின் ஜூபிடர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையில் உள்ளார்.
"மகேஷ் கெய்க்வாட் மற்றும் கண்பத் கெய்க்வாட் ஆகியோருக்கு ஏதோ ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தது, அவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்தனர். அந்த நேரத்தில், அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், அப்போது கண்பத் கெய்க்வாட் மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவருடன் வந்த நபர்களை நோக்கி சுட்டார். இதில் 2 பேர் காயமடைந்தனர். விசாரணை நடந்து வருகிறது" என்று டி.சி.பி சுதாகர் பதரே கூறினார்.
"உல்ஹாஸ்நகர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு சுற்று துப்பாக்கிச் சூடு நடந்தது" என்று டி.சி.பி பதரே கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்னது என்ன?
இதற்கிடையில், சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே மாநில அரசைத் தாக்கியதோடு, "இந்த துப்பாக்கிச் சூடு காவல் நிலையத்திற்குள் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் மற்றும் சுடப்பட்டவர் சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவர் மகேஷ் கெய்க்வாட். லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய ஒரு எம்.எல்.ஏ மக்களை சுட்டுக் கொல்வது துரதிர்ஷ்டவசமானது. 3 எஞ்சின் கொண்ட அரசில், இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு கொல்ல முயற்சிக்கின்றனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி., இந்த சம்பவத்திற்கு ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமானவர் என்றும், காவல் நிலையத்தில் சுடப்பட்டவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சிவசேனா தலைவர் மீது கண்பத் கெய்க்வாட் ஏன் 'துப்பாக்கிச்சூடு' நடத்தினார்?
இரு தலைவர்களும் கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9