Lord Ram: 'ராமர் அசைவம் சாப்பிட்டார்': NCP மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை
ஒரு சைவ உணவாளராக இருந்த ராமர் எப்படி 14 ஆண்டுகள் காட்டில் வாழ முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் ஜிதேந்திர அவாத் கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளான ஜனவரி 22-ம் தேதியை Dry Day வாக அறிவிக்க வேண்டும் என்றும், அனைத்து அசைவ உணவுகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்த நிலையில், ராமர் ஒருபோதும் சைவ உணவு உண்பவர் அல்ல என்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஜிதேந்திர அவாத் கூறிய கருத்து மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ (சரத் பவார் பிரிவு) ராமர் ஒரு பகுஜன் மற்றும் அசைவ உணவு உண்பவர் என்றும் அவர் ஒரு வேட்டைக்காரர் என்றும் கூறினார்.
"நாம் வரலாற்றைப் படிப்பதில்லை, அரசியலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. ராமர் நம்முடையவர். நாம் பகுஜன்கள். வேட்டையாடி சாப்பிடுவது யார்? ராம் ஒருபோதும் சைவ உணவு உண்பவர் அல்ல. அவர் ஒரு அசைவ உணவு உண்பவர். காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி சைவ உணவு உண்பவராக இருக்க முடியும்" என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
பாஜக எம்.எல்.ஏ ராம் காதம் கூறுகையில், 'பாலாசாகேப் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், சிவசேனாவின் சாம்னா செய்தித்தாள் 'ராமர் அசைவம்' கருத்தை விமர்சித்திருக்கும். ஆனால், இந்துக்களை யாராவது கேலி செய்தாலும் அவர்கள் (உத்தவ் சேனா) கவலைப்படுவதில்லை என்பதே இன்றைய யதார்த்தம். அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள், பனியைப் போல குளிர்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வரும்போது இந்துத்துவா பற்றி பேசுவார்கள்' என்று ராம் காதம் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.
ஜனவரி 22-ம் தேதியை Dry Day வாகவும், சைவ நாளாகவும் அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ராம் காதம் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கருத்து ஏற்படுத்திய சர்ச்சைக்கு பதிலளித்த ஜிதேந்திர அவாத், "ராமர் என்ன சாப்பிட்டார் என்பதில் சர்ச்சை என்ன? ராமபிரான் வெந்தயப் பஜ்ஜி (வெந்தய இலை பஜ்ஜி) சாப்பிட்டார் என்று சிலர் கூறுவார்கள். அப்போது சோறு இல்லை. ராமர் ஒரு சத்திரியர், க்ஷத்திரியர்கள் அசைவம் உண்பவர்கள். நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். இந்திய மக்கள் தொகையில் 80% பேர் அசைவ உணவு உண்பவர்கள், அவர்களும் ராமரின் பக்தர்கள்" என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
வனவாசத்தின் போது ராமர் பழங்கள் சாப்பிட்டார்: அர்ச்சகர்
அவாத்தின் கூற்றுக்கு கண்டனம் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், ‘வனவாசத்தின் போது ராமர் பழங்களை உட்கொண்டதாக சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத் பேசுவது முற்றிலும் தவறானது. ராமர் வனவாசத்தின் போது அசைவ உணவு உட்கொண்டதாக நமது சாஸ்திரங்களில் எங்கும் எழுதப்படவில்லை. அவர் பழங்கள் சாப்பிட்டார் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பொய்யனுக்கு நம் ராமரை அவமதிக்க எந்த உரிமையும் இல்லை... எங்கள் கடவுள் எப்போதும் சைவ உணவு உண்பவர்... நம் ராமரை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுகிறார்’ என்று அர்ச்சகர் தெரிவித்தார்.