535 கிலோ தங்கம்..வங்கியில் டெபாசிட் செய்ய அனுமதி - கேரள ஐகோர்ட் உத்தரவு!
Travancore Devaswom Board: கேரளாவில் கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 535 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 535 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தங்கத்தை டெபாசிட் செய்வதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
கேரள மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களை நிர்வகிக்கும் பணிகளை தேவசம் போர்டு என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கோயில்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின் மற்றும் கூடல்மாணிக்யம் ஆகிய 5 தேவசம் போர்டுகள் கேரளாவில் இயங்கி வருகின்றன.
இதில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் சபரிமலை ஐய்யப்பன் கோயில் உள்பட 1025 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த சூழலில், கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்ய அனுமதிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேவசம் போர்டின் கீழ் உள்ள கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, காணிக்கையாக பெறப்பட்ட சுமார் 535 கிலோ தங்கத்தை 5 ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
தங்கத்தை முதலீடு செய்வதின் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை தேவசம் போர்டின் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கத்தை டெபாசிட் செய்வதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த உத்தரவின் மூலம் சபரிமலை உள்ளிட்ட 16 அறைகளில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்