Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறப்பு?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறப்பு?

Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறப்பு?

News checker HT Tamil
Published Jul 03, 2024 03:54 PM IST

Kasargod Muslim League office: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறக்கப்பட்டது என புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் உண்மை இருக்கா என்பது குறித்து பார்ப்போம்.

Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறப்பு?
Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து முஸ்லீம் லீக் அலுவலகம் கேரளாவில் திறப்பு? (x)

உண்மை: வைரலாகும் வீடியோவில் காணப்பட்டவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும் வெவ்வேறானதாகும்.

“ராகுல் காந்தி தொகுதியில் கேரளாவில் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து கேரளா காசர்கோடு லீக் அலுவலகம் திறப்பு. நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் என்றால் இவர்கள் யாருக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள் என்ன கொடுமை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு அந்தக் குழு களத்தில் இறங்கியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவலில் ராகுல் காந்தியின் தொகுதி காசர்கோடு என்று பரப்பப்படுகின்றது. இது தவறானத் தகவலாகும். உண்மையில் கேரளாவின் வயநாடு தொகுதியில்தான் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்றார்; காசர்கோடில் அல்ல. காசர்கோடில் காங்கிரஸை சார்ந்த ராஜ்மோகன் உன்னித்தான் என்பவரே பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் கூற்று

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் பரவும் வீடியோவை உற்று நோக்குகையில், அவ்வீடியோவில் காணப்படுபவர்கள்வர்கள் அணிந்திருக்கும் பச்சை ஜெர்ஸியில் ‘ஆரங்காடி’ என்று எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து இதை அடிப்படையாக வைத்து தேடியதில் Sakkeer Poozhithara என்கிற பயனர் ஐடியை கொண்ட டிவிட்டர் பக்கத்தில் காசர்கோடு ஆரங்காடி பகுதியில் முஸ்லீம் லீம் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடியதில் ‘பச்சப்படா (பச்சை படை) ஆரங்காடி’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் வீடியோவை ஒத்த மற்றொரு வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து அப்பக்கத்தை ஆராய்கையில் கேரளா காசர்கோடில் உள்ள ஆராங்காடு பகுதியில் முஸ்லீம் லீக் கட்சிக்கென்று புதிய கட்டிடம் திறக்கப்பட்டது என்றும், அது தொடர்பான கொண்டாட்ட வீடியோவே வைரலாகியுள்ளது என்றும் அறிய முடிந்தது.

பச்சை நிற ஜெர்ஸி

அப்பக்கத்தில் தொடர்ந்து தேடியதில் இக்கொண்டாட்டம் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தை காண முடிந்தது. அவ்வீடியோக்களில் ஒன்றாக சிறுவர்கள், இளைஞர்களென பலர் பச்சை நிற ஜெர்ஸி அணிந்து ஊர்வலம் வருவதை காண முடிந்தது.

அவ்வீடியோவை ஆய்வு செய்கையில் அந்த ஜெர்ஸியின் பின்பக்கத்தில் பச்சப்படா (பச்சை படை) ஆரங்காடி என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதேபோல் முன்பகுதியில் ஆரங்காடி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. இதுத்தவிர்த்து முன்புற வலது பக்கத்தில் முஸ்லீம் லீக்கின் அடையாளச் சின்னம் இடம்பெற்றிருந்தது. வலது கை பகுதியில் IUML என்றும், இடது கை பகுதியில் MYL என்றும் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து வீரர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அப்படத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியின் முன்புறத்தில் பாகிஸ்தான் என்று எழுதப்பட்டிருந்தது. இதுத்தவிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அடையாளச் சின்னம், 2024 டி20 உலகக்கோப்பையின் அடையாளச் சின்னம் உள்ளிட்டைவையும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஜெர்ஸியானது முஸ்லீம் கட்சியினர் அணிந்திருந்த ஜெர்ஸியிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்டவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும் வெவ்வேறானதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் Newschecker இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.