Supreme Court: நீதிபதி சுவாமிநாதன் குறித்து விமர்சிப்பதை நீதிபதி ஜெயச்சந்திரன் தவிர்த்திருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்
Supreme Court: "தீர்ப்பு மற்றும் தீர்ப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்தது தொடர்பான புகாரின் பேரில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர் மீது கஞ்சா வழக்கும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உடனடியாக சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், அதே அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
மாறுபட்ட தீர்ப்பு
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரனுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த விசாரணையில்தான், மறு தரப்பையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'LATIN MAXIM AUDI ALTERAM PARTEM'தான் சட்டக் கல்லூரிகளில் முதல் பாடம், அதை கடைபிடிக்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்ததாக நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் வழக்கில் அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலமாக மாநில காவல்துறைக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாரபட்சம் காட்டியுள்ளார் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியிருந்தார்.
இதற்கிடையில், மூன்றாவது நீதிபதியும் ஆட்கொணர்வு மனுவை இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் என மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்தார். இதனையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தன் மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர், "தீர்ப்பு மற்றும் தீர்ப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம்" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் குறிப்பிடுகையில், "உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்த நீதிபதி தனது சகோதரர் நீதிபதி மீது சில கருத்துக்களை கூறியுள்ளதை தவிர்க்க வேண்டும். தீர்ப்பு மற்றும் தீர்ப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
“தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பான விஷயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு உயர் நீதிமன்றத்தை நாங்களும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி, உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிப்பதால், வழக்கின் தகுதி குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை." என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்கிற்கு மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றும் மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்றும் நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்