USA: அமெரிக்க அதிபர் தேர்தல்-களம் காண இந்திய வம்சாவளி தொழிலதிபர் முடிவு!
Vivek Ramasamy: தற்போது ஸ்டிரைவ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், நிர்வாக தலைவராகவும் உள்ளார் விவேக் ராமசாமி.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) ஜோ பைடன் தற்போது அதிபராக பதவி வகித்து வருகிறார். தற்போது 80 வயதாகும் ஜோ பைடன், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வல்லரசு நாடான அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார்.
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் மொத்தம் 4 ஆண்டுகள் ஆகும். அதன்படி அடுத்த ஆண்டுடன் அமெரிக்க அதிபர் பைடனின் பதவிக் காலம் முடிவுக்கு வரவுள்ளது.
இப்போதே தேர்தலுக்கான பரபரப்பு அமெரிக்காவில் தொற்றிக் கொண்டது. அடுத்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து முன்னால் அதிபர் டிரம்ப் ஆதரவு திரட்டி வருகிறார்
2011 முதல் 2017 வரை தெற்கு கரோலினாவின் 116வது கவர்னராக பணியாற்றிய நிக்கி ஹாலேவும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது 37 வயதாகும் விவேக் ராமசாமி, ஓஹியோவில் பிறந்தார். இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.
"இனப் பாகுபாடு தேசிய அச்சுறுத்தல் ஆகும். அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போகிறேன்" என்றார் விவேக் ராமசாமி.
யார் இந்த விவேக் ராமசாமி?
ராய்வன்ட் சயின்சஸ் என்ற பயோபார்மாசிட்டிகல் கம்பெனியை நிறுவினார். பெரும் செல்வந்தராக அமெரிக்காவில் விளங்கி வருகிறார் விவேக் ராமசாமி.
அதிபர் போட்டியிடும் நான்காவது இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆவார்.
தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் ராமசாமி, செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளங்கலை பட்டப்படிப்பை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.
அவர் பயோலஜி படிப்பில் பட்டம் பெற்றார். யேல் சட்ட பள்ளியில் சட்டமும் படித்துள்ளார்.
சட்டம் படித்த பிறகு டேவிஸ் போல்க் அண்டு வார்டுவெல் சட்ட மையத்தில் அட்டார்னியாக
பணயில் சேர்ந்தார். பின்னர், அங்கிருந்த வெளியேறிய அவர், ராய்வன்ட் சயின்சஸ் பயோடெக் நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது ஸ்டிரைவ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், நிர்வாக தலைவராகவும் உள்ளார்.
கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக நிதியுதவி செய்து வருபவர். Woke, Nation of victims ஆகிய 2 நூல்களை எழுதியுள்ளார் விவேக் ராமசாமி.
டாபிக்ஸ்