Maldives tourism: மாலத்தீவு சுற்றுலாவை புறக்கணிக்க இந்தியப் பிரபலங்கள் அழைப்பு
பல இந்திய பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்கள் மாலத்தீவு சுற்றுலாவைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரு அமைச்சர் உட்பட சில மாலத்தீவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து பல இந்திய பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்குள்ளவர்கள் மாலத்தீவுகள் மற்றும் அதன் சுற்றுலாத் தலங்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் ஆன்லைன் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது, இது பயண ஆர்வலர்களிடையே லட்சத்தீவின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. தனது பயணத்தின் போது, பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகிய கடற்கரைகளையும் பார்வையிட்டார். கடலில் குளித்தபடி பிரதமர் மோடி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி எக்ஸ் தளத்தில் டாப் டிரெண்டிங்கில் இருந்தன.
இருப்பினும், லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சி, மாலத்தீவில் உள்ள அரசு அதிகாரிகள் உட்பட சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியுனா மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து கேலி செய்திருந்தார். மேலும் சில மாலத்தீவு நெட்டிசன்களும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி மற்றும் அவமதிக்கும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை அடுத்து, சில இந்திய பிரபலங்கள் மற்றும் ஆன்லைன் இன்ஃப்ளூயன்சர்கள் மாலத்தீவை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. சனிக்கிழமையன்று, சோப்ரா எக்ஸ் இல் பதிவிட்டதாவது: "இனி, இந்தியர்களாகிய நாம்தான் புத்திசாலித்தனமாக சுற்றுலா செல்லும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். என் குடும்பம் செய்யும் என்று எனக்குத் தெரியும். ஜெய் ஹிந்த்". என்று குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு அமைச்சரின் சமீபத்திய கருத்துக்களை அடுத்து மாலத்தீவு பயணங்களை ரத்து செய்யுமாறு சமூக ஊடக செல்வாக்கு மிக்க சோனம் மகாஜன் இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"அன்புள்ள இந்தியர்களே, இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று தீவிரமாக விரும்பும் மாலத்தீவு அமைச்சர்கள் சொல்வதைக் கேளுங்கள். மாலத்தீவுக்கான உங்கள் பயணத் திட்டங்களை (ஏதேனும் இருந்தால்) விரைவில் ரத்து செய்யுங்கள். மக்கள் உங்களை வெறுக்கும் ஒரு நாட்டிற்கு நீங்கள் ஏன் செல்ல விரும்புகிறீர்கள்? லட்சத்தீவு உங்களுக்காக காத்திருக்கிறது" என்று மகாஜன் எழுதினார்.
மற்றொரு சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர் லட்சத்தீவில் சூரிய உதயத்தின் படத்தை ட்வீட் செய்து, மாலத்தீவுக்கு பதிலாக இந்த தீவுக்கு வருகை தருமாறு இந்தியர்களை கேட்டுக்கொண்டார். "லட்சத்தீவுகளில் சூரிய உதயம். மாலத்தீவில் இதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்" என்று பாபா பனாரஸ் அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்