HT Elections Story: ‘நாடாளுமன்றத் தேர்தல் 1962’ ஹேட் டிரிக் அடித்த நேரு! அடுத்தடுத்து இறந்த பிரதமர்கள்!
”1964ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆனார்”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்ட நிலையில் நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் களத்தை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
1952 மற்றும் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார்.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு முன் வரை நடைமுறையில் இருந்த இரட்டை பாராளுமன்ற உறுப்பினர்கள் முறை நீக்கப்பட்டு ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்வு முறை நடைமுறைக்கு வந்தது.
492 தொகுதிகளும், ஆங்கிலோ இந்தியர்களுக்காக 2 நியமன எம்.பிக்கள் முறையும் நடைமுறைக்கு வந்தன. விவசாயம், தொழில்துறைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள், இந்திய சுதந்திரத்தின் தாக்கம், ஜவஹர்லால் நேருவின் செல்வாக்கு உள்ளிட்டவை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை கொடுத்து இருந்தது.
இந்த தேர்தலில் மொத்தமிருந்த 492 தொகுதிகளில் 361 தொகுதிகளில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக ஜவஹர்லால் நேரு பிரதமராக பொறுப்பேற்றார். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய ராஜாஜியின் சுதந்திரா கட்சி 18 இடங்களை வென்றது.
இன்றைய பாஜகவின் தாய் அரசியல் இயக்கமான பாரதிய ஜனசங்கம் 14 இடங்களையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 6 இடங்களையும் வென்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர்.
1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்தோ - சீனபோர் நாட்டிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
1964ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
டாபிக்ஸ்