HBD Rahul Gandhi : இந்திராவின் பேரன்; இந்தியாவின் ‘இளவரசன்’ எதிர்காலத்தை வளமாக்குவாரா ராகுல் காந்தி?
HBD Rahul Gandhi : இந்திராகாந்தியின் பேரன், ராஜிவ் காந்தியின் மகன், காங்கிரஸ் கட்சி எதிர்காலமாக கருதும் ராகுல் காந்தி பிறந்த தினம் இன்று. இந்நாளில் ராகுல் குறித்த சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.
ராகுல் காந்தி, 1970ம் ஆண்டு ஜீன் 19ம் தேதி பிறந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். உத்ரபிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இந்திய லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவின் தற்போதைய எதிர்கட்சியான காங்கிரஸின் தூணாக பார்க்கப்படுபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் தலைவராக டிசம்பர் 2017 முதல் 2019ம் ஆண்டு வரை இருந்தார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி. டெல்லியில் பிறந்த இவர், பெரும்பாலான தனது குழந்தை பருவ காலத்தை டெல்லி மற்றும் டேராடூனில் கழித்தார். இவர் பள்ளிக்காலத்தில் பொது இடங்களில் பெரும்பாலும் தோன்றவில்லை. ஆரம்ப பள்ளிக்கல்வியை டெல்லி மற்றும் டேராடூனில் கற்றார்.
பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலிருந்தே கல்வி கற்றார். செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றார். பின்னர் அவரது தந்தை கொல்லப்பட்டதையடுத்து, ஃப்ளோரிடாவில் உள்ள ரோலிங் கல்லூரிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டார். கேம்பிரிட்ஜில் எம்.பிஃல் முடித்தார். லண்டனில் ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தில் தனது முதல் பணியை துவக்கினார்.
பின்னர் இந்தியா வந்து ஒரு நிறுவனத்தை துவங்கினார். பணி செய்த இடத்தில் தன்னை யார் என்று அவர் அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. வெளிநாட்டில் இவரது பணி முத்திரை பதிக்கும்படியாக இருந்ததாக இவரது நண்பர்கள் இவரை பாராட்டினார்கள்.
2004ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்டார். 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகள் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக 2013ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக அவர் பொதுச்செயலாளராக இருந்தார். 2014 காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இவர் தலைமை வகித்தார்.
அப்போது 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய 2009ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அக்கட்சி 206 இடங்களை பிடித்திருந்தது.
பின்னர் தலைவராகி வழிநடத்திய 2019ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார். இவர் முன்னாள் இந்திய பிரதமர் ஐவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரனும் ஆவார். இவரது சகோதரி பிரியங்கா வதேரோ. இவரது மைத்துனர் ராபர்ட் வதேரா.
அரசியல் துவங்கிய காலத்தில் ஏற்பட்ட சுணக்கம், பின்னர் கிடைத்த முதிர்ச்சி என தற்போதைய அரசியலில் அவ்வப்போது லைம் லைட்டிலும், அவ்வப்போது சுணங்கியும் இருக்கும் ராகுல் காந்தி, 2022ம் ஆண்டு நடத்திய பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதாக இருந்தது.
அதன் பின்னர் நடந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி, வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. முன்னதாக அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டாலும், காங்கிரஸின் வெற்றிக்காக அயராது பாடுபடும் ராகுலுக்கு என்ன பதவி கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனினும், இந்தியாவின் பெரிய குடும்பத்தின் இளவரசராக கருதப்படும் சார்மிங்கான ராகுல் பெண்களின் ஆல் டைம் கிரஷ்தான். தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மேலும் வசிகரிக்கும் ராகுல் இந்தியாவின் எதிர்காலத்தை வளமாக்குவரா? என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரது பிறந்த நாளில் அவருக்கு ஹெச்.டி தமிழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
டாபிக்ஸ்