Democratic Azad Party: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Democratic Azad Party: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

Democratic Azad Party: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

Karthikeyan S HT Tamil
Sep 26, 2022 03:30 PM IST

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

<p>குலாம் நபி ஆசாத் (PTI)</p>
<p>குலாம் நபி ஆசாத் (PTI)</p>

காங்கிரஸ் கட்சியில் மிக நீண்டகாலமாக இருந்த குலாம் நபி ஆசாத், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிர்வாகிகள் காங்கிரஸில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக ஆசாத் என்கிற கட்சியை குலாம் நபி ஆசாத் இன்று தொடங்கினார். தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தி பேசிய குலாம் நபி ஆசாத், தனது கட்சியில் இணைவதற்கு வயது வரம்பு இல்லை எனவும் இளைஞர்களும் மூத்தவர்களும் இணைந்த கட்சியாக இது இருக்கும் என்றார்.

புதிய கட்சிக்குப் பெயர் வைக்க 1,500க்கும் மேற்பட்ட பெயர்கள் உருது மற்றும் சமஸ்கிருதத்தில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜனநாயகம், அமைதி, சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தக் கூடியதாக கட்சியின் பெயர் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனால் தான் இந்த பெயரை வைத்துள்ளோம். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதே தற்போது தங்கள் முன்னுரிமைப் பணி எனவும் அவர் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால் கட்சியின் பெயரை விரைவாக பதிவு செய்வது மிகவும் அவசியம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தனது கட்சிக்கு நீலம், வெள்ளை, வெளிர்மஞ்சள் வண்ணத்திலான கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தாா்.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளாக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் முதல்வர், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என போர்க்கொடி உயர்த்திய ஜி – 23 அதிருப்தி தலைவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.