தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரித்தனரா?-வைரல் வீடியோ

Fact Check: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரித்தனரா?-வைரல் வீடியோ

News checker HT Tamil
May 29, 2024 02:30 PM IST

மத்திய அமைச்சர் அமித் ஷா தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்று பேசிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய இராணுவத்தையும் ஆதரிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Fact Check: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரித்தனரா?-வைரல் வீடியோ
Fact Check: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரித்தனரா?-வைரல் வீடியோ

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மை: வைரலாகும் வீடியோவுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இவ்வீடியோவில் இருக்கும் சம்பவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள உரி என்ற நகரத்தில் நடந்ததாகும் என்பதை நியூஸ்செக்கர் கண்டறிந்துள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷா தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம் என்று பேசிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்தியாவையும் இந்திய இராணுவத்தையும் ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து நியூஸ் செக்கர் குழு தேடியது.

இத்தேடலில் காஷ்மீரை அடிப்படையாக கொண்ட The people’s voice எனும் ஆன்லைன் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 20, 2023 அன்று வைரலாகும் வீடியோவை பதிவிட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் குஜ்ஜார் மற்றும் பகர்வால் சமுதாயத்தை சார்ந்தவர்கள் எஸ்.டி. பச்சோவ் அந்தோலன்’ எனும் நிகழ்வை நடத்தியதாகவும், அந்நிகழ்வில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவளித்து நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் உரிமையை காப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்ததகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மை கண்டறியப்பட்டது

தொடர்ந்து நியூஸ் செக்கர் குழு தேடுகையில் The Gujjars of Uri J&K எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 19, 2023 அன்று இதே வீடியோ மேற்கூறிய அதே தகவலுடன் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

J&k Gujjar Bakerwal Union எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆகஸ்ட் 20, 2023 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து The people’s voice ஊடகத்தின் நிருபர் இக்பால் சோஹானை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தொடர்புக் கொண்டு பேசியிருக்கின்றனர். அவர் இச்சம்பவம் உரியில் நடந்ததாகவும், அச்சமயத்தில் அவர் அந்த இடத்தில்தான் இருந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹாரி பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும், இதனை எதிர்த்து பாரம்பரியமாக பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குஜ்ஜார் மற்றும் பகர்வால் பிரிவினர் போராட்டம் செய்ததாகவும், அந்த போராட்டத்தின்போதே மேற்கண்ட உறுதிமொழியை அவர்கள் எடுத்ததாகவும்’ தெரிவித்தார்.

இதனையடுத்து தேடுகையில் பஹாரி மற்றும் வேறு மூன்று சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜ்ஜார் மற்றும் பகர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள் போராடியது குறித்து ஆகஸ்ட் 10, 2023 அன்று ஃபிரண்ட்லைன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு உட்பட்ட உரி பகுதியை சார்ந்தவர்களாவர்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொறுப்புத்துறப்பு: இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்