தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Earthquake : Shocking Death Toll - What Is Happening In Turkey Syria!

Earthquake : பதற வைக்கும் பலி எண்ணிக்கை - என்ன நடக்கிறது துருக்கி சிரியாவில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 08, 2023 12:36 PM IST

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.

இடிபாடுகளில் இருந்து தன் தம்பியை காப்பாற்றிய சிறுமி
இடிபாடுகளில் இருந்து தன் தம்பியை காப்பாற்றிய சிறுமி (@BillyDib (Twitter) )

ட்ரெண்டிங் செய்திகள்

தென் கிழக்கு துருக்கியில் உள்ள எகினோசு நகரத்தை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த திங்களன்று ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று , மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் தலைநகர் அங்காரா மற்றும் துருக்கியின் பிற நகரங்களிலும், பல்வேறு பகுதியிலும் உணரப்பட்டது. வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் பல இடிந்து விழுந்தது. அந்த கட்டிடங்களிலிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது, காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியா, லெபனான், சிப்ரஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

இதனிடையே நிலநடுக்கத்தால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையானது கடும் பனிப்பொழிவால் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது. மேலும் ஈராக், எகிப்த் போன்ற நாடுகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் அந்நகரைச் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து இடிந்து தரைமட்டமாகின. தற்போது வரை 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் மட்டும் தற்போது வரை 5894 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சிரியாவில் சோகம்

இதேபோல் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2470 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் சிரியாவிலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவை தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அந்நாட்டு மக்களும் கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் சிரியாவில் இடிபாடுகளை சிக்கிய சிறுமி தன் தம்பியை காப்பாற்றி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்