மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி: முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்?
பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவோடு மகராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஓரணியில் திரண்டனர். அதனைத் தொடர்ந்து சிவசேனை தலைமையிலான ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரியிடம் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவந்திர பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரும் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனை மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டதால், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜிநாமா செய்தார். இது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், "மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைய ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு நன்றி. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு நன்றி. எங்கள் கட்சியினரே எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதனால்தான் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது." என்றார்.
முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என கூறப்படுகிறது. புதிய அரசு அமைக்க பாஜக உரிமைகோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும், அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை ஆளுநரிடம் பட்னாவிஸ் அளிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
சிவசேனை எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம் மகாராஷ்டிரவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் பலம் முழுமையாக பாஜகவுக்கு கிடைக்கும். இதன் மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து நாளை (ஜூலை 1) முதல்வராக தேவந்திர பட்னாவிஸ் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
டாபிக்ஸ்