Blizzard of the century: 50 பேரை கொன்ற அமெரிக்காவின் ‘நூற்றாண்டு பனிப்புயல்’!
US Blizzard: ‘துணை மின்நிலையம் 18 அடிக்கு கீழ் பனியில் புதைந்ததாகவும், பஃபலோவின் சர்வதேச விமான நிலையம் செவ்வாய் வரை மூடப்பட்டிருக்கும் என்றும், நகரத்திற்கும் எரி கவுண்டியின் பெரும்பகுதிக்கும் வாகனம் ஓட்ட தடை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நூற்றாண்டின் பனிப்புயல்‘ என்று அதிகாரிகள் அழைக்கும் ஒரு இடைவிடாத புயல், அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 50 பேர் உயிரை குடித்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வடகிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பனிப்புயல் நிலைமைகள் தொடர்கின்றன. பல நாட்களாக நாட்டைப் பற்றிக் கொண்ட தீவிர வானிலையின் காரணமாக, பரவலான மின் தடைகள், பயண சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் மாநிலத்தில், அதிகாரிகள் கொடூரமான நிலைமைகளை விவரித்துள்ளனர். குறிப்பாக பஃபலோவில், பனி படிமங்களில் வாகனங்கள் மற்றும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவசரகால பணியாளர்கள், கார்களிலிருந்து தப்பி பிழைக்க முயற்சித்தவர்களை தேடி வருகின்றனர்.
கடுமையான பனி மூட்டம், ஊளையிடும் காற்று மற்றும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை ஆகியவற்றால் சமீபத்திய நாட்களில் 15,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களை ரத்து செய்யப்பட்டன. திங்களன்று மட்டும் கிட்டத்தட்ட 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குளிர் காலநிலையை அறியாத எரி கவுண்டியில் உள்ள ஒரு நகரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நகரமே பனிப்பொழிவின் கீழ் புதைந்துள்ளது. "நிச்சயமாக இது நூற்றாண்டின் பனிப்புயல்" என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில மேற்கு நியூயார்க் நகரங்கள் "ஒரே இரவில் 30 முதல் 40 அங்குலங்கள் (0.75 முதல் 1 மீட்டர்) பனியால் சூழப்பட்டதாகவும்" ஹோச்சுல் கூறியுள்ளார்.
திங்களன்று, ஜனாதிபதி ஜோ பிடனுடன் ஹோச்சுல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் நியூயார்க் மாநிலத்தை பாதுகாக்க மத்திய அரசாங்கத்தின் முழு பலத்தையும் வழங்குவதாக உறுதியளித்தாக கூறப்படுகிறது. மேலும் புயலில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக தானும், தன் மனைவி ஜில் பிடனும் பிரார்த்தனை செய்வதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய வானிலை சேவை திங்கள்கிழமை மேலும் 14 அங்குலங்கள் வரை பனிப்பொழிவு இருக்கும் என்று கணித்துள்ளது. ஏற்கனவே நகரம் பல அடிகள் புதைந்து விட்டது. அதிகாரிகள் அவசரகால சேவைகளை ஆன்லைனில் பெற சிரமப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எரி கவுண்டி நிர்வாக அதிகாரி போலன்கார்ஸ், ‘எரியில் 1977 ஆம் ஆண்டு பனிப்புயலில் கிட்டத்தட்ட 30 பேர் இறந்ததாகவும், இந்த முறை அந்த எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும்,’ என்று கூறினார்.
தேசிய காவல்படை உறுப்பினர்களும் மற்ற குழுக்களும் நூற்றுக்கணக்கான மக்களை பனி மூடிய கார்கள் மற்றும் மின்சாரம் இல்லாத வீடுகளில் இருந்து மீட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று ஒரு கட்டத்தில், கிட்டத்தட்ட 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் கடும் குளிரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சிரமப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் திங்கள் கிழமை மதியம் 50,000 பேர் மின்சாரம் இல்லாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
ஒரு துணை மின்நிலையம் 18 அடிக்கு கீழ் பனியில் புதைந்ததாகக் கூறப்படுகிறது. பஃபலோவின் சர்வதேச விமான நிலையம் செவ்வாய் வரை மூடப்பட்டிருக்கும் என்றும், நகரத்திற்கும் எரி கவுண்டியின் பெரும்பகுதிக்கும் வாகனம் ஓட்ட தடை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் சாலைகளில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பொருட்சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘நூற்றாண்டு பனிப்புயல்’ அமெரிக்க மக்களை அச்சுறுத்தி வருகிறது.