Rajasthan Congress manifesto: 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்'-முதல்வர் கெலாட்
காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மக்களுக்கு ஏழு "உத்தரவாதங்கள்" அல்லது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில கட்சி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, தேர்தல் அறிக்கை குழு தலைவர் சிபி ஜோஷி, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். மாநில கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பஞ்சாயத்து அளவில் ஆட்சேர்ப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான புதிய திட்டத்தை ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதியளித்தது.
"ராஜஸ்தானின் நிதி நிலைமையை நாங்கள் நிர்வகித்த விதம் சிறப்பாக இருக்கிறது. ராஜஸ்தான் மக்கள் அதைப் பற்றி பெருமிதம் கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் தனிநபர் வருமானம் 46.48 சதவீதம் அதிகரித்துள்ளது. 2030க்குள் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தை எட்டுவது எங்கள் கனவாக இருக்கும். 2020-21ல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 19.50ஐ எட்டியது, இது கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகம்" என்று செய்தியாளர்களிடம் கெலாட் கூறினார்.
காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மக்களுக்கு ஏழு "உத்தரவாதங்கள்" அல்லது வாக்குறுதிகளை கெலாட் அறிவித்துள்ளார்.
ஏழு "உத்தரவாதங்கள்"
- க்ரிஹ லக்ஷ்மி யோஜனா உத்திரவாதத்தின் கீழ் குடும்பத் தலைவிக்கு ரூ. 10,000 ஆண்டு நிதியுதவி
- 500 முதல் 1.05 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள்.
- கௌதன் உத்தரவாதத்தின் கீழ் கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து கிலோ ரூ.2க்கு சாணம் வாங்குதல்.
- அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்டம்.
- அரசு கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
- இயற்கைப் பேரிடரால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வரை காப்பீடு மற்றும் ஆங்கில வழிக் கல்வி.
- சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக மாற்றப்படும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கார்கே, “நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை 90 சதவிகிதம் செய்தால் அது ராஜஸ்தானுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மிகப்பெரிய சாதனையாகும்." என்றார்.
ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தது.
2018 சட்டசபை தேர்தலில், 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. இறுதியில் பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கெலாட் முதல்வராக பதவியேற்றார்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.