இதுவரை குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு? - ஓர் பார்வை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இதுவரை குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு? - ஓர் பார்வை

இதுவரை குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு? - ஓர் பார்வை

Karthikeyan S HT Tamil
Jul 24, 2022 08:59 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த முழு தகவல்களை இந்தப் பகுதியில் விரிவாகக் காணலாம்.

<p>குடியரசுத் தலைவர் மாளிகை</p>
<p>குடியரசுத் தலைவர் மாளிகை</p>

எலக்டோரல் காலேஜ்

இந்திய குடியரசுத் தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை கிடையாது. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

வாக்கு மதிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்எல்ஏ, எம்.பியின் வாக்கு வங்கி வேறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

யார் போட்டியிட முடியாது?

இந்திய அரசுத் துறையிலோ அல்லது இந்திய அரசுப் பதவியிலோ மாநில அரசிலோ அல்லது உள்ளூர் அரசு அமைப்பிலோ எந்தப் பதவியையும் வகிக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் எந்தத் துறையிலும் நிர்வாகப் பதவியில் இருக்கக் கூடாது. இந்தத் தகுதியுடைய ஒருவரே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்.

எத்தனை முறை போட்டியிடலாம்?

ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அவரே மீண்டும் ஒரு முறை போட்டியிடலாம். அதன்படி, குடியரசுத் தலைவர் பதவிக் காலம் இரண்டு முறைக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்பது சட்டம்.

இதுவரை போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்களா?

இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே. அதுபோல இரண்டு முறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார்.

குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

1957, 1962 மற்றும் 1997ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டுமே 90 சதவிகிதத்தை எட்டியது. 1957-ல் ராஜேந்திர பிரசாத் 98.99 சதவிகித வாக்குகளைப் பெற்று இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 98.25 சதவிகித வாக்குகளைப் பெற்றார். 1967ல் ஜாகீர் உசேன் பெற்ற வாக்குகள் 56.2 சதவிகிதம் ஆகும். 

1969ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வி.வி.கிரி, 50.9 சதவிகிதத்துடன் குறைவான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதுவே மிகக்குறைந்த வாக்கு சதவிகிதம் ஆகும். 

1974ல் பக்ருதின் அலி அகமது 78.9 சதவிகிதம், 1977ல் நீலம் சஞ்சீவி ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ல் ஜெயில் சிங் 72.7%, 1987ல் வெங்கட்ராமன் 72.3%, 1992 சங்கர் தயாள் சர்மா 65.9%, 1997ல் கே.ஆர்.நாராயணன் 94.97%,  2002ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் 89.6%, 2007ல் பிரதீப பாட்டீல் 65.8%, 2012ல் பிரணாப் முகர்ஜி 69.3 சதவிகித வாக்குகளை பெற்று குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தனர்.

அதன்பின்னர், 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இந்தியாவின் 14வது குடியரசு தலைவராகப் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவர் 65.7 சதவிகித வாக்குகளை பெற்றார். தற்போது நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு 64.3 சதவிகித வாக்குகளை பெற்று குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரதீபா பாட்டீலுக்கு பிறகு குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் 2-வது பெண்மணி என்ற பெருமையையும், பழங்குடி பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற புகழைப் பெற்றிருக்கிறார் திரெளபதி முர்மு.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.