தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tn Water Bodies Plastic Particles In Tamil Nadu Water Bodies And Fish Are Inescapable Shocking Study

TN Water Bodies : தமிழக நீர்நிலைகளிலும், மீன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கம் பிளாஸ்டிக் துகள்கள் – அதிர்ச்சி ஆய்வு!

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 03:16 PM IST

TN Water Bodies : தமிழக நீர்நிலைகளிலும், மீன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கம் பிளாஸ்டிக் துகள்கள் – அதிர்ச்சி ஆய்வு!

TN Water Bodies : தமிழக நீர்நிலைகளிலும், மீன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கம் பிளாஸ்டிக் துகள்கள் – அதிர்ச்சி ஆய்வு!
TN Water Bodies : தமிழக நீர்நிலைகளிலும், மீன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கம் பிளாஸ்டிக் துகள்கள் – அதிர்ச்சி ஆய்வு!

ட்ரெண்டிங் செய்திகள்

அரசின் நிதிஉதவியோடு தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் செய்த 3 வருட ஆய்வில், தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும், மீன்களிலும் சிறுபிளாஸ்டிக் துகள்கள் (Microplastics-5 மில்லிமீட்டருக்கு குறைவான விட்டத்தைக் கொண்ட பிளாஸ்டிக்) நீக்கமற நிறைந்திருந்து உணவுச் சங்கிலி மூலம் மக்களுக்கு பேராபத்து நிகழக் காத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"Assessment of microplastics in coastal areas, estuaries, lakes in Tamilnadu" எனும் 500 பக்கங்களுக்கு மேலாக உள்ள ஆய்வறிக்கை தமிழ்நாடு காலநிலை உச்சிமாநாடு.2 ல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சிறுபிளாஸ்டிக் பாதிப்பில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் (Single use Plastics) அதிகமிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து சட்டரீதியான தடை அமலில் இருந்தும் எந்த பயனும் இல்லை/ அரசுக்கு மக்களின் சுகாதாரத்தை அல்லது சுற்றுச்சூழலை காப்பதை விட வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுப்பதே முக்கியம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்த ஆய்வில் 18 மாவட்டங்களில் உள்ள 112 இடங்களில், 14 கடலோர மாவட்டங்களில் 51 கடலோர இடங்களில்,19 முகத்துவாரங்கள், 42 ஏரிகளில் (கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்கள் உட்பட) நீர், வண்டல் படிமம் (Sediments), மீன்கள், மட்டி மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

அகச்சிவப்பு மற்றும் ராமன் ஸ்பெக்ட்ராஸ்கோப்பி மூலம் மீன்களில் உள்ள சிறுபிளாஸ்டிக் துகள்களை கண்டறிய முடியும்.

ஆய்வில், தமிழகத்தில் எந்த ஒருநீர்நிலையும், அதிலுள்ள மீன்களும் சிறுபிளாடிக் பாதிப்பிலிருந்து தப்பவில்லை எனும் அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் துடுப்பு மீன்களும் (Finfish), மட்டி மீன்களும் (Shellfish) அதிக அளவில் உண்ணப்படும் வேளையில், அதில் சிறுபிளாஸ்டிக் துகள்கள் அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்நிலைகளிலும், மீன்களிலும் அதிகமிருக்கும் சிறுபிளாஸ்டிக் துகள்கள் உணவுச்சங்கிலி மூலம் மனிதருக்குள் சென்று பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்த முடியும்.

சுகாதாரச் சீர்கேடுகள்-

சிறுபிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களுக்கு,

ஹார்மோன் பிரச்னைகள்,

உடல்பருமன் அதிகமாதல்,

இன்சுலின் ஹார்மோன் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மை,

இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு, புற்றுநோய், நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் (Oxidative stress), செல்களில் பாதிப்பு (Cytotoxicity) போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த முடியும்.

பொதுவாக, நீரிலும், மீன்களிலும் சிறுபிளாஸ்டிக் துகள்கள் முற்றிலும் இல்லாதிருப்பது நல்லதென்றாலும், ஒரு மீனில் 2.5 சிறுபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் அவற்றின் எண்ணிக்கை கூடுதலாகவே இருப்பது தெரியவந்துள்ளது. 

கடலோர நீரில், சிறுபிளாஸ்டிக் லிட்டருக்கு 23-155 என அதிகமாக உள்ளது.

வண்டல் படிமத்தில், கிலோவுக்கு 37-189 என அதிகமாக உள்ளது.

முகத்துவாரங்களில், ஒரு லிட்டர் நீரில் 31-154 என அதிகமாகவும், ஒரு கிலோ வண்டலில் 51-171 என அதிகமாகவும் உள்ளது. 

நகர்புற, கிராமப்புற 39 ஏரிகளில் ஆய்வு செய்ததில் நகர்புற ஏரிகளில் சிறுபிளாஸ்டிக் பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழக மீன்வளத்துறை புள்ளிவிவரப்படி, மீன் உட்கொள்ளும் நபர் ஒருவர் ஆண்டுக்கு 9.83 கிலோ மீன்களை உண்பது தெரியவந்துள்ளது.

எனில், 

மேற்கு கடற்கரையில் வசிப்பவர் 709 சிறுபிளாஸ்டிக் துகள்கள்,

மன்னார் வளைகுடா பகுதியில் வசிப்பவர் 830 துகள்கள்,

பாக் ஜலசந்தியில் வசிப்பவர் 792 துகள்கள், 

கோரமண்டல் கடற்கரையில் (சென்னை உட்பட) வசிப்பவர் 1076 துகள்கள் 

மனித உடம்பிற்குள் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடலோர மட்டிமீன்கள் உண்பவர்கள் உடம்பில்,

மேற்கு கடலோரம் 1981துகள்கள்,

மன்னார் வளைகுடா 1238 துகள்கள்,

பாக் ஜலசந்தி 1517 துகள்கள்,

கோரமண்டல கடலோரம் 3017 துகள்கள் ஓராண்டில் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

முகத்துவாரங்களில் வசிக்கும் மக்களுக்கு,

மீன்கள் வாயிலாக 781 துகள்களும், மட்டி மீன்கள் வாயிலாக 2,809 துகள்களும் ஆண்டுக்கு உடம்பினுள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

மட்டிமீன்களில் சிறுபிளாஸ்டிக் அதிகம் இருப்பதால் அதை உண்பவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

இதுகுறித்து தமிழக சூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக "மீண்டும் மஞ்சப்பை திட்டம்" குறித்தான விழிப்புணர்வு பரவலாக்கப்படும்.

Extended Producers Responsibility-EPR அடிப்படையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அதற்கு பொறுப்பேற்று அதை பாதிப்பில்லாமல் அகற்றும் பணியை மேற்கொள்வதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தாலும், தமிழகத்தில் 10 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சிய 90 சதவீத குப்பைகளில் அப்படியே கொட்டப்பட்டோ அல்லது முறையான அறிவியல் ரீதியாக வழிவகை மூலம் அகற்றப்படாமலோ இருக்கும் சூழலே உள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் வெறும் 70 நிறுவனங்கள் மட்டுமே பிளாஸ்டிக்கை முறையாக அகற்ற கையெழுத்திட்டுள்ளன.

ஆய்வில், வசதிக்காக, ஆய்விடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மேற்கு கடலோரம், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, கோரமண்டல் கரை என இருக்கும் சூழலில், கோரமண்டல் கடற்கரையில் தான் சிறுபிளாஸ்டிக் துகாள்களின் பாதிப்பு அதிகம் என்பதும், குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவலத்தில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. 

முகத்துவாரங்கள் பகுதியிலும், அடையாறு முகத்துவாரத்தில் தான் சிறுபிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு ஒரு லிட்டர் நீரில்-124-154 என்றும், ஒரு கிலோ வண்டலில்-147-171 என கோடை மற்றும் மழைக் காலங்களில் அதிகமாக உள்ளது.

ஏரிகளிலும் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தான் சிறுபிளாஸ்டிக் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

சுற்றுலாத் தல ஏரிகளில் ஊட்டியில் தான் அதிக பாதிப்பு உள்ளது.

"வளர்ச்சி" அதிகம் உள்ள பகுதிகளில் தான் சிறுபிளாஸ்டிக் பாதிப்பு அதிகம் உள்ளது என முக்கிய உதவி ஆய்வாளர் பேட்டர்சன் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடா பகுதியில் ஊடுறுவும் கடல்பாசி காப்பாபைகஸ் அல்வாரெசி பவளப்பாறைகளை அழித்து மீன்வளத்தையூம் பாதித்தது குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம். 

தமிழக மாசு கட்டுப்பாரியத் தலைவர் ஜெயந்தி கூறுகையில்,"விரைவில் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் உள்ள 47 ஏரிகள் சிறுபிளாஸ்டிக் பாதிப்பு குறித்தான அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தமிழக முக்கிய ஆறுகள் அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்படும்" என்றும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தகந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மக்களின் சுகாதாரத்தைக் காப்பது (உணவுச்சங்கிலியில் சிறுபிளாஸ்டிக் பாதிப்பை கட்டுப்படுத்துவது) அரசின் கடமை என இருக்க அதை உறுதிசெய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க முன்வருமா?

நன்றி – மருத்துவர் புகழேந்தி 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9k

WhatsApp channel

டாபிக்ஸ்